தற்போது தெரிய வந்து கொண்டிருக்கும் நூலகத் துறை முறைகேடுகள் சிறு துளியே!

மக்களை சார்ந்து பதிப்பகங்கள் இயங்கிய நிலை மாறி, அரசுத் துறை ஆர்டர்களை நம்பி மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் சூழல் உருவானதில் தொடங்கி இந்த முறைகேடுகள் எப்படியெல்லாம் பரிணாமம் பெற்றன எனப் பார்ப்போம்;

மக்கள் செலுத்தும் சொத்து  வரிகளில் 10 சதவீதம் பொது நூலகத் துறைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த வகையில் சென்னை மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து மட்டத்திலும் பல நூறு கோடி ரூபாய் நூலகத்துறைக்கு கிடைக்கிறது. இந்த பணத்தை யார் அதிகம் கைபற்றுவது என்பது தான் இன்றைய பதிப்பகத்தாரின் ஒரே இலக்காக உள்ளது.

மக்களிடம் அறிவையும், நல்ல இலக்கியத்தையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் வளர்க்க எண்ணி நூல்கள் தயாரிக்க பதிப்பகம் உருவாக்கினர் நமது முன்னோர். இன்று மக்களிடம் தங்கள் நூல்களை விற்பது முக்கியமல்ல, அரசு ஆர்டர்களை அள்ளுவதே முக்கியம் என்ற பதிப்பாளர்களின் போக்கு தான் நூலக ஊழல்களுக்கு காரணமாகும்.

நூலகத்தால் அறிவை விருத்தி செய்து வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்! என் இளமை காலத்தில் புத்தகங்கள் என்றும், நூலகமென்றும் உழன்றுழன்று வளர்ந்தவன் நான்!

1980 களில் வெறும் 10 முதல் 20 ரூபாய்க்குள் ஆகச் சிறந்த படைப்பாளிகளின்  நூல்கள் விற்பனையான காலத்தில் அதையும் வாங்க வசதியின்றி, நூலகத்தை நம்பி வாழ்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.
அந்த காலகட்டத்திலேயே நூலகத் துறையின் வீழ்ச்சியை கண் கூடாக உணர முடிந்தது.

12 பேர் இருக்க வேண்டிய அரசு நூலகத்தில் வெறும் மூன்று பேர் மட்டுமே வேலை பார்க்கும் அவலம்.  மூன்று பேர் இருக்க வேண்டிய நூலகத்தில் ஒருவர் மட்டுமே பணி செய்த சூழல். இதனால் ஆள் பற்றாகுறையால் மைய நூலகத்தில் இருந்து அனுப்பப்படும் நூல்கள் இருக்கும் அட்டைப் பெட்டியை பிரிக்காமல் வருஷ கணக்கில் மூலையில் போட்டு வைத்திருந்தன… ஆகியவற்றை 1980 களிலேயே கண்டு கொந்தளித்து எழுதியுள்ளேன்.

ஆண்டுக்காண்டு நூலக சீரழிவுகள் அதிகமானதேயன்றி குறையவில்லை. 2020 களில் ஒரே ஒரு நூலகரே காலை முதல் மதியம் வரை ஓரிடமும், மதியத்தில் இருந்து இரவு வரை வேறொரு இடம் சென்று திறந்து வேலை பார்ப்பதுமாக ஒரு நூலகர் இரு நூலகத்திற்குமானவர் என்றெல்லாம் சீரழிவு நிலைக்குச் சென்றன.

இந்த பதிப்பகத் துறை உருவான தொடக்க காலத்தில் இது ஒரு சேவைத் தொழிலாகவே கருதப்பட்டது. இதன் முன்னோடிகள் நல்ல நூல்களை கொண்டு வரும் லட்சியவாதிகளாக இருந்தனர். இப்படி ஒரு லட்சியவாதியாக இருந்து தன்னைத் தானே அர்ப்பணித்து அழிந்து போன பதிப்பகச் சாதனையாளர் சக்தி வை.கோவிந்தனாகும்.

ஆனால், உண்மையில் இன்று பதிப்பகத்துறையில் இருப்போர்களில் முக்கால்வாசிப் பேர் அரசு தரப்பு ஆர்டர்கள் இல்லையென்றால், பதிப்பகத்தை இழுத்து மூடிவிடக் கூடியவர்களாகவே உள்ளனர்.

பல பிரபல பதிப்பகங்களும் இந்த வகைக்குள் வருவார்கள்!
அரசு நூலகத்தை நம்பி மட்டுமே செயல்படும் பதிப்பகத்தார்கள் தான் தற்போதைய பெரும் ஊழல்களுக்கு வித்திட்டார்கள் என்பதே நூறு சதவிகித உண்மையாகும்.

அரசு தரப்பு ஆர்டர்கள் என்றால், அரசு நூலகங்களுக்கான ஆர்டர்கள் மட்டுமல்ல, பல்வேறு துறை சார்ந்த ஆர்டர்கள் உள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கென்று ஊரக நூலகங்கள் என்பதாக கலைஞர் ஆட்சியில் புதிய கருத்தாக்கம் உருவானது. ரொம்ப உள் கிராமப் பகுதியில் உள்ள ஏழை, எளியோருக்கும் அறிவு வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கம் இதற்கு கற்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 2006 – 2011  திமுக ஆட்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் 12,618 ஊரக நூலகங்கள் துவங்குவதாக பட்ஜெட்டில் அறிவுப்பு வெளியானதும் பிரபல பதிப்பகங்களின் செல்வாக்கான கோஷ்டி அரசுக்கு நெருக்குதல் தந்து பல கோடிகளுக்கு ஆர்டர்கள் பெற்று ஒவ்வொரு புத்தகத்திலும் 20,000 பிரதிகள், 30,000 பிரதிகள் அடித்து தந்து பல கோடிகள் பெற்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால், கிராமப் பகுதிகளில் நூலகம் கட்டப்பட்ட பிறகு முறைப்படி நூல்களுக்கு ஆர்டர் தராமல், நூல்களுக்கான ஆர்டர் முதலில் தந்துவிட்டனர். எங்களுக்கு புத்தக ஆர்டரும், பணமும் வந்தால் போதும் யார் படித்தால் என்ன? எங்காவது மூலையில் கடாசினால் என்ன? என்ற பாணியில் இந்த பிரபல பதிப்பகங்கள் கிராமப் புறத்தில் உள்ள அங்கன்வாடியின் சிறிய அறையிலோ, அல்லது ஏதாவது சத்துணவு கூடத்திலோ அல்லது யாராவது ஒருவர் பொறுப்பிலோ அதை போட்டுவிட்டு பணம் பார்த்தனர்.

இதற்கு பிறகு சில கிராமங்களில் 400 சதுர அடிப் பரப்பளவில் ஒரு இடத்தை அவசர, அவசரமாகக் கட்டி புத்தகத்தை அடுக்க இரும்பு ரேக்குகள் வாங்கி அடுக்கி வைத்தனர். ஆனால், அந்த இடத்தில் நூல்களை பராமரிக்க, பாதுகாக்க ஆட்களை நியமிக்காததால் மிகப் பெரும்பாலான இடங்களில் இந்த நூல்கள் அனைத்தும் வீணாகப் போனது தான் கண்ட பலனாகும்.

இதன் பின்னர் அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளில், ஊரக நூலகங்கள் முழுமையாக அலட்சியப்படுத்தப்பட்டதில் அந்த நூல்களின் கதி என்னவானது என்றே தெரியாத நிலையில் மீண்டும் திமுக ஆட்சி வந்து 2021ம் ஆண்டு முதல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 12,525 ஊரக நூலகங்களையும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு பல நூறு கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவை தவிர பள்ளிக் கல்வித் துறை, கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு மொத்தமாக நூல் விநியோகம் செய்து பணம் பார்க்கும் கோஷ்டி ஒருபுறம் இருக்கிறது.

இதில் சர்வ சிக்ஷியா அபியான் என்ற திட்டத்திற்க்காக விளையாட்டுத்தனமான கல்வியை கற்கும் போஸ்டர்கள், சிறு கையேடுகள் ஆகியவற்றை லட்சக்கணக்கில் உருவாக்கி தயாரித்து பல கோடிகள் பணம் பார்ப்பவர்களும் உள்ளனர்.

தமிழ் வளர்ச்சித் துறையோடு கைகோர்த்து என்.சி.பி.ஹெச் நிறுவனம் அம்பேத்காரின் எழுத்துக்களை எளிய தமிழில் நூலாக்கம் செய்வதற்காக ரூ ஐந்து கோடியை பெற்றுள்ளது. இதில் 13 தலைப்புகளில் 100 நூல்கள் கொண்டு வருகிறார்களாம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனமான என்.சி.பி.ஹெச் நிறுவனம் பல அரசுத் துறைக்குள் ஊடுருவி அதிகாரிகளை ஊழல்மயப்படுத்தி பல அரசு கல்லூரி நூலகங்களுக்கான ஆர்டர்களை பெறுகிறது என சக பதிப்பாளர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

இவை போன்று அரசின் தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களது குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக, மாணவர் முன்னேற்றத்திற்காக பல கோடிகளுக்கு நூல்கள் வாங்குவதால் பதிப்பாளர்களிலேயே இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஒரு கூட்டாக திரண்டு இந்த ஆர்டர்களை பெற்று பணம் பார்க்கிறார்கள்!

பெரும்பாலான பதிப்பாளர்கள் எழுதுகின்ற எழுத்தாளர்களுக்கு உரிய சன்மானம் கொடுக்காமல் சுரண்டியும், அரசு கஜானாவைச் சுரண்டியுமே கொழுத்து திளைக்கிறார்கள்! இவர்களின் பப்பாசி அமைப்பை சேர்ந்த முருகன் என்பவர் இன்னும் ஒருபடி மேலே போய் சக பதிப்பாளர்களையே சுரண்டி அரசு கஜானாவை அள்ளி எடுத்து சிறு துளிகளை சிலருக்கு தந்து பெரும் பகுதியை தான் வைத்துக் கொண்டு ஊழல் முறைகேட்டில் உச்சத்தை தொட்டார்.

இந்தக் கூட்டுக் கொள்ளையில் ஒரு பங்காளராக இருக்க விரும்பாமல் தனக்கென்று தனி ரூட் போட்டுக் கொண்டு போய்விட்டவராகத் தான் நாம் அகல் விளக்கு பதிப்பக மோகனை கணிக்க வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் பதிப்பக முதலாளிகள் தங்களை சுரண்டிக் கொழுப்பதை விரும்பாமல் தாங்களே பதிப்பகத் தொழிலுக்கு வந்த பிரபல எழுத்தாளர்களும் இந்த நூலகத் துறை ஊழல்களில் தங்களையும் ஒரு பங்காளியாக இணைத்துக் கொண்டனர்.

எஸ்.இராமகிருஷ்ணன், அ.வெண்ணிலா போன்றவர்கள் சில அரசுத் துறைகளில் ஆலோசனை குழு உறுப்பினர்களாக நியமனம் பெற்று அந்த வாய்ப்பில் தங்கள் நூல்களையே அங்கே தள்ளி காசு பார்க்கப் பார்த்து வெளியில் தெரிய வர பெரும் பிரச்சினை வெடித்துள்ளது.

மற்றொரு புறம் பருவ இதழ்கள் என்பதாக அந்தந்த ஆளும் கட்சிக்காரர்களின் பத்திரிக்கைகள் நூலகத்தில் குவியத் தொடங்கின. நூலகத் துறையை மட்டுமே நம்பி நடத்தப்படும் பருவ இதழ்கள் பல தற்போதும் வந்து கொண்டுள்ளன. மருத்துவம், விவசாயம், இலக்கியம், பொழுது போக்கு, கட்டுமானம்..பல தலைப்புகளில் வெளியாகும் இவை கடைகளில் எங்கும் கிடைக்காது.

அரசு நூலகத்திற்காக இது போன்ற இதழ்கள் நிறையவே வாங்கப்பட்டுக் கொண்டுள்ளன. இவை பல நூலகங்களில் பிரிக்கப்படாமல் அப்படியே கிடக்கும். பிரித்து வாசகர்கள் பார்வைக்கு வைப்பது தானே நூலகரின் வேலை எனக் கூறி சில நூலகத்தில் நான் கேட்ட போது, சார் வைத்தும் பயனில்லை யாரும் படிக்க மாட்டார்கள் என்று பதில் சொல்லிவிடுவார்கள்.

இப்படி நூலகத்திற்கு என்றே பத்திரிகைகளை தயாரித்து செயல்படும் பத்திரிகை முதலாளிகள் ஒரு சிண்டிகேட் அமைத்து மொத்தமாக ஒரு பெரும் பணத்தை ஊழல் அதிகாரிகளுக்கு தருவதால் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இந்த பத்திரிக்கைகள் வாங்கப்படும் அவலம் தொடர்கிறது.

யதார்த்தத்தில் பதிப்பகத் துறையும், நூலகத் துறையும் எதற்காக உருவானதோ, அந்த நோக்கத்தில் இருந்து விலகி வெகுதூரம் சென்றுவிட்டன. இதை மீட்க மிஅக் நேர்மையான- பொது நலன் சார்ந்த – அணுகுமுறை தேவை!

சாவித்திரி கண்ணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *