
ஓசூர் மலர் சந்தை பெயர் பலகை விவகாரம்: தெலுங்கு மொழி பாதுகாப்பு மற்றும் நிரந்தரத் தீர்வு கோரி தெலுங்கு சமூகத்தினர் செய்தியாளர்கள் சந்திப்பு!
ஓசூரில் தாய்மொழியைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பெயர் பலகை விவகாரம் தொடர்பாக தெலுங்கு சமூகத்தினர் கண்டனம் மற்றும் கோரிக்கைகள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மலர் விற்பனை மையத்தில், கடைகளின் பெயர் பலகைகளில் தெலுங்கு மொழி இடம்பெற்றுள்ளதற்கு சில அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் பெயர் பலகைகள் இருக்கக்கூடாது என மிரட்டியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தெலுங்கு மொழி பேசும் மக்களின் சார்பில், ஆந்திர சமிதி மையத்தில் உள்ள முன்னாள் எம்எல்ஏ கோதண்டராமய்யா அரங்கத்தில்,செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் மூர்த்தி ரெட்டி, ராஷ்டிரிய தெலுங்கு சமாக்கியாவின் தென்மாநில சவுத் ஜோன் சேர்மன் சீதாராமையா மற்றும் நாகராஜ் கவுடா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
மூர்த்தி ரெட்டி பேட்டி:
நாங்கள் ஓசூரில் பூக்கடை நடத்தி வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடைகளுக்கு வந்து, ‘தமிழ் போர்டு மட்டும்தான் இருக்கணும், ஓசூர் தமிழ்நாட்டில் இருக்கா அல்லது ஆந்திராவில் இருக்கா?’ என்று கேட்டு கலாட்டாவில் ஈடுபட்டனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஓசூரில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மும்மொழி பேசும் மக்கள் பல ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் தமிழையும் மதிக்கிறோம், ஆனால் எங்களது தாய்மொழியான தெலுங்கையும் கட்டாயமாக அகற்றச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தாய்மொழியைப் பயன்படுத்துவது குறித்து அரசாணை (GO) கூட உள்ளது. சில அரசியல் கட்சியினர் மட்டும் வேண்டுமென்றே இதுபோன்று தொந்தரவு அளித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு எங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
*சீதாராமையா பேட்டி*
ராஷ்டிரிய தெலுங்கு சமாக்கியா தென்மாநில சவுத் ஜோன் சேர்மன் சீதாராமையா தெரிவித்ததாவது:
பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு பூக்கடைப் பகுதியில் சில நபர்கள் வந்து, பெயர் பலகைகளில் உள்ள மற்ற மொழி எழுத்துக்களை அகற்ற வேண்டும் என்று பிரச்னை செய்துள்ளனர். மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட காலத்திலிருந்தே இப்பகுதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஓசூர் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும், பல்வேறு மொழி மக்கள் இங்கு அண்ணன் தம்பிகளைப் போல ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் சில கிருமிகள் வந்து பிரச்னை செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.
நாங்கள் தமிழைக் கற்றுக்கொண்டு அரசுப் பணிகளிலும், வர்த்தகத்திலும் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம். அதேசமயம் எங்களது தாய்மொழியையும் பாதுகாத்தாக வேண்டும். அரசாங்கம் இதில் தலையிட்டு, மாநிலத்தின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
*நாகராஜ் கவுடா பேட்டி:*
1931-ஆம் ஆண்டு மெட்ராஸ் அரசாங்கத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பழைய ஓசூர் தாலுகா தொகுதியில் 88% பேர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுபவர்களாக இருந்தனர். 1970-களில் தொழிறமயமாக்கலுக்குப் பிறகு தமிழ் பேசும் சகோதரர்கள் இங்கு வந்து குடியேறியதால் சதவீதம் மாறியுள்ளது. இருப்பினும், பல நூற்றாண்டுகளாக இம்மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 467 தெலுங்கு மற்றும் கன்னட சிறுபான்மை பள்ளிகள் உள்ளன.
தமிழைக் கட்டாயம் கற்றுக்கொள்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; அதே நேரத்தில் சிறுபான்மை பள்ளிகளில் தாய்மொழியான தெலுங்கு அல்லது கன்னடம் தவறாமல் கற்பிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண் எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்.
ஓசூர் ஒரு பன்னாட்டு நகரம் (Cosmopolitan city). இங்கு மொழிகளைப் பலவந்தமாகத் திணிக்கக் கூடாது. தமிழைக் கருணை கூர்ந்து மதிப்பது போல, தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தையும் சமமாக மதிக்க வேண்டும்.
ஓசூர் மூன்று பக்கங்களிலும் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லைகளை ஒட்டியுள்ள ஒரு எல்லை மாவட்டமாகும். வியாபாரத்திற்காகப் பிற மாநிலப் பகுதி மக்களும் இங்கு வருகிறார்கள்.
எனவே, தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் தமிழுடன் சேர்த்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளையும் அனைத்து பெயர் பலகைகளிலும் (Name boards) இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
கேரளாவின் காசர்கோடு (கன்னடம் இரண்டாவது மொழி), மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைப் போல, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் வாழ்வதை ஏற்றுக்கொண்டு, தெலுங்கு மற்றும் கன்னடத்தை இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக (Second official language) நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஓசூர் பகுதியில் நிலவும் மொழி நல்லிணக்கத்தைக் பாதுகாக்கவும், சிறுபான்மை மொழி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு உரிய பாதுகாப்பு மற்றும் நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்பதே தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் தற்போதைய ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
பேட்டி:
1. மூர்த்தி ரெட்டி மலர் விற்பனையாளர்,
2. சீதாராமையா, தெலுங்கு மொழி அமைப்பின் பிரதிநிதி,
3. நாகராஜ கவுடா, ஓசூர்
E. V. Palaniyappan. Hosur Reporter.
