புத்தகக் கொள்முதல் ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் வலியுறுத்திய திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பண்டிகைக் காலத்தில் பட்டாசு சத்தத்தை விட பட்டா கத்தி சத்தமே அதிகம் கேட்டது; பண்டிகை நாளில் மட்டும் 17 கொலைகள் நடந்துள்ளன. முதலமைச்சரை தலைமைச் செயலாளரும் டிஜிபியும் கூட தொடர்புகொள்ள முடியவில்லை என்ற தகவல் கிடைக்கிறது. இது 10 மணிக்கு வந்து 5 மணிக்குச் செல்லும் பள்ளி வேலை அல்ல, 24 மணி நேரமும் செய்ய வேண்டிய பணி. திறமையற்ற அதிகாரிகளா அல்லது முதலமைச்சரா என்ற சந்தேகம் எழுகிறது. ரசிகராக இருந்து டிக்கெட் விற்றவர்களெல்லாம் எம்.எல்.ஏ ஆனால் இப்படித்தான் இருக்கும்; பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

பரந்தாமனின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும், சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை முந்தைய ஆட்சியை விடத் தற்போது ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டுச் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரௌடிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன், மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும் மேம்படுத்தவும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து புத்தகக் கொள்முதல் ஊழல் குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “ஆயுதங்கள், கள்ளநோட்டுகள் மற்றும் போதைப்பொருட்களைப் பிடிப்பது போல, கள்ளப் புத்தகங்களைப் பிடித்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. கன்னிமாரா நூலகத்திற்குள் 523 குப்பைகளை அவர்கள் சேர்த்திருக்கிறார்கள். நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் இந்த வலை அமைப்பு அவர்களின் சித்தாந்தத் தோல்வியையே (Ideological Failure) காட்டுகிறது. பெரியாரின் பெயரைச் சொல்லி பகுத்தறிவு பேசியவர்கள், பெரியார் அறிவுலகத்திலேயே ஊழல் செய்துள்ளனர். நம் அரசைப் பொறுத்தவரை எதிலும் சமரசம் செய்யாமல், சட்ட நடைமுறைகளின்படி குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *