தமிழகத்தின் தொழில்நகரமான ஸ்ரீபெரும்புதூரில் ஃபெஸ்டன் நிறுவனத்தின் அதிநவீன பேட்டரி உற்பத்தி மையம் முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் தூய எரிசக்தி சேமிப்பு திறனை வலுப்படுத்தும் நோக்கில், ஃபெஸ்டா குழுமம் இந்த பிரம்மாண்ட பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) உற்பத்தி வசதியை அமைத்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் தூய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும், உள்நாட்டிலேயே உயர்தர மின்கல சேமிப்பு அமைப்புகளை உருவாக்கவும் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மின் சேமிப்பு கட்டமைப்பை நவீனப்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் நவீன பேட்டரி உற்பத்தி மையம்
சென்னைக்கு அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட ஆலை, நிறுவனத்தின் உற்பத்தி கட்டமைப்பை உலகத்தரத்திற்கு உயர்த்தியுள்ளது. முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டில் ஃபெஸ்டன் எஸ்.இ.வி என்ற பெயரில் சூரியசக்தி இன்வெர்ட்டர் தயாரிப்பு பிரிவை இந்நிறுவனம் தொடங்கியது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் தற்போது அதிநவீன பேட்டரி உற்பத்தி மையம் கிகாவாட் அளவிலான உற்பத்தி தளமாக பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 3 ஜிகாவாட் மணி (3 GWh) அளவிலான மின்கல அமைப்புகளை உற்பத்தி செய்யும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தை தேவைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் இதன் உற்பத்தி திறனை மேலும் விரிவாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின் உற்பத்தி தொழில்நுட்பங்களையும் அதிநவீன மின்கல சேமிப்பு கட்டமைப்புகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முழுமையான தளமாக இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மின்கலங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் மிக நுணுக்கமாக நடத்தப்படுகின்றன. பேட்டரி செல் பரிசோதனை, மாட்யூல் தயாரிப்பு, கணினி அடிப்படையிலான பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச தரக் கட்டுப்பாட்டு சோதனைகள் வரை அனைத்து பணிகளையும் கையாளும் வகையில் பேட்டரி உற்பத்தி மையம் முழுமையான உற்பத்தி சங்கிலியை கொண்டிருக்கிறது. இதன் மூலம் மின் சேமிப்பு சாதனங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
எரிசக்தி தன்னிறைவு மற்றும் வேலைவாய்ப்பு
வீட்டு உபயோகம், வணிக வளாகங்கள், கனரக தொழிற்சாலைகள் மற்றும் மின் பயன்பாட்டு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற தீர்வுகளை வழங்குவதே தங்கள் நோக்கம் என்று ஃபெஸ்டா குழுமம் விளக்கியுள்ளது. சூரிய மின்சாரத்தை முறையாக சேமித்து வைப்பதன் மூலம் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும். மின்சார செலவினங்களை கட்டுப்படுத்தவும், பொது மின் விநியோக கட்டமைப்பு மீதான அதிகப்படியான அழுத்தத்தை குறைக்கவும், பசுமை ஆற்றல் பயன்பாட்டை விரிவுபடுத்தவும் இந்த பேட்டரி உற்பத்தி மையம் பெரிதும் துணைபுரியும்.
மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘பில்ட் ஃபார் இந்தியா’ தொலைநோக்கு திட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் உள்நாட்டு உதிரிபாக விநியோக சங்கிலி இங்கு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு உயர்தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு தேவைகளை நிறைவு செய்வது மட்டுமின்றி, சர்வதேச ஏற்றுமதி சந்தையையும் இலக்காகக் கொண்டு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, தென் தமிழகத்தின் திருநெல்வேலி பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் மற்றொரு பிரம்மாண்ட ஒருங்கிணைந்த பேட்டரி உற்பத்தி மையம் மற்றும் உற்பத்தி வளாகத்தை நிறுவவும் குழுமம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியா ஆசியான் உறவு அமைதிக்கான அடித்தளம்: மணிலா மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
