வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மீது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடும் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. நாட்டின் நிதித் துறையில் தகுந்த விதிமுறைகளைப் பின்பற்றாத, போதிய மூலதனம் இல்லாத மற்றும் செயல்பாடுகளை நிறுத்திய நிறுவனங்களைக் கண்டறிந்து அவற்றின் வர்த்தக உரிமங்களை ரத்து செய்யும் நடவடிக்கையை மத்திய வங்கி தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒருபகுதியாக, ஒரே கட்டமாக 49 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வைத்திருந்த பதிவுச் சான்றிதழ்களை ஆர்பிஐ அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. 1934-ஆம் ஆண்டைய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 45-ஐஏ (6)-ன் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1 முதல் அக்டோபர் 29, 2026 வரையிலான காலக்கட்டத்தில் இதற்கான ரத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. நிதிச் சந்தையில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும், முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாக்கவும் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மிக அவசியமானவை என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் சான்றிதழ் ஒப்படைப்பு
இதைத் தவிர, 13 வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ஒரு வீட்டு வசதி நிதி நிறுவனம் (HFC) ஆகியவை தங்களின் பதிவுச் சான்றிதழ்களை தானாக முன்வந்து ஆர்பிஐயிடம் திரும்ப ஒப்படைத்துள்ளன. நிதி வர்த்தகத்தில் இருந்து முற்றிலும் வெளியேறுதல், பிற நிறுவனங்களுடன் இணைக்கப்படுதல் அல்லது நிறுவனங்கள் கலைக்கப்படுதல் போன்ற காரணங்களால் இவை சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளன. இத்தகைய நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து உரிமங்களை ஒப்படைப்பது, சந்தையில் தேவையற்ற நிறுவனங்களைக் குறைத்து, வலுவான நிறுவனங்கள் மட்டுமே நீடிக்க வழிவகுக்கும்.
இவற்றில் 6 நிறுவனங்கள் நிதிச் சேவை வர்த்தகத்தில் இருந்து விலகியதால் உரிமத்தை ஒப்படைத்துள்ளன. மேலும் 5 நிறுவனங்கள் தகுதியான விதிமுறைகளின்படி பதிவு தேவைப்படாத வகையைச் சேர்ந்தவையாக மாற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 3 நிறுவனங்கள் சட்டபூர்வமாகச் செயல்படுவதை நிறுத்திவிட்டன அல்லது பிற நிறுவனங்களுடன் இணைந்துவிட்டன. மனிஷ் சின்தெடிக்ஸ், அமர் பிளாசா அண்ட் ஹோல்டிங்ஸ், விகோனிக் வியாபார், ரைட் டிரெஷர் ஃபைனான்ஸ், பிராவோ கேபிட்டல் சர்வீசஸ் மற்றும் சிஜிஆர் மெர்கன்டைல் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சான்றிதழ்களை ஒப்படைத்த பட்டியலில் அடங்கும்.
பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட அல்லது திரும்ப ஒப்படைக்கப்பட்ட எந்தவொரு நிறுவனமும் இனி இந்தியாவில் நிதி சார்ந்த எந்தவொரு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று ஆர்பிஐ திட்டவட்டமாக எச்சரித்துள்ளது. சட்டப்பூர்வ விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கிசாரா நிதி நிறுவனங்கள் செயல்படுவதை உறுதிசெய்யவே இத்தகைய கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இத்தகைய வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு நீடிக்கும் என ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்களும் முதலீட்டாளர்களும் தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் ஆர்பிஐ பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டவையா என்பதைச் சரிபார்ப்பது அவசியமாகும். மேலும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் குறித்த சமீபத்திய அறிவிப்புகளை ஆர்பிஐ இணையதளத்தில் அவ்வப்போது சரிபார்ப்பது நிதி பாதுகாப்பிற்கு உதவும்.
இதையும் படிக்க: மொத்த விலை பணவீக்கம் 12.29 சதவீதமாக உயர்வு: எரிபொருள் விலை உயர்வே முக்கிய காரணம்!
குறிப்பு: இந்தச் செய்தி தகவலுக்காக மட்டுமே. பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரைக் கலந்தாலோசிக்கவும்.
