தோஹாவில் நாளை (நவம்பர் 1) தொடங்கும் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதிச் சுற்றின் முதல் முக்கிய கட்டமாக அமைகிறது. நவம்பர் 14 வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் ஒலிம்பிக் இடங்களைப் பெறும் நம்பிக்கையுடன் களமிறங்குகின்றனர்.
36 ஒலிம்பிக் இடங்கள் பணயத்தில்
ரைபிள், பிஸ்டல், ஷாட்கன் பிரிவுகளுக்கான இந்தப் போட்டியில், 12 தனிநபர் ஒலிம்பிக் பிரிவுகளில் மொத்தம் 36 ஒலிம்பிக் இடங்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று இடங்கள் கிடைக்கும்.
ஒலிம்பிக் தகுதி இடங்கள் பெரும்பாலும் உலக சாம்பியன்ஷிப் போன்ற சர்வதேசப் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. அதனால் ஒவ்வொரு போட்டியும் ஒலிம்பிக் பயணத்தில் ஒரு முக்கிய படியாகவே பார்க்கப்படுகிறது.
ஒரு நாடு ஒரு பிரிவில் அதிகபட்சம் இரண்டு வீரர்களையே ஒலிம்பிக்கிற்கு அனுப்ப முடியும் என்பது விதி. எனவே ஒவ்வொரு இடமும் இந்தியாவுக்கு மிக முக்கியம்.
துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளின் பிரிவுகள், துப்பாக்கி வகைகள் மற்றும் விதிமுறைகள் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பால் (ISSF) நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த விதிகளின்படியே உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியும் நடத்தப்படுகிறது.
மனு பாகர், நீரு தண்டா தலைமையில் இந்தியா
இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற மனு பாகரும், சிறப்பான form-இல் உள்ள டிராப் வீராங்கனை நீரு தண்டாவும் இந்திய அணியை முன்னின்று வழிநடத்துகின்றனர். போட்டிக்கு முன்னதாக தேர்வான வீரர்கள் புது தில்லி டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் மையத்தில் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
இந்த உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பல பிரிவுகளில் வீரர்களை நிறுத்துகிறது.
10 மீ ஏர் ரைபிள் பிரிவு
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா அனுபவமும் இளமையும் கலந்த அணியை அனுப்புகிறது. ஆண்கள் பிரிவில் 18 வயதான பார்த் மானே, ஹிமான்ஷு தில்லான், பார்த் மகிஜா ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஹிமான்ஷு தில்லான் ஆசிய விளையாட்டில் தனிநபர் பிரிவில் வெள்ளி வென்றவர்.
பெண்கள் பிரிவில் இரு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளவேனில் வாளறிவன் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு கெய்ரோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் அவர் வெண்கலம் வென்றார். அவருடன் சம்பவி க்ஷீர்சாகர், சோனம் மஸ்கர் ஆகியோரும் களமிறங்குகின்றனர். இருவரும் இந்த ஆண்டு ஆசிய அளவில் பதக்கம் வென்ற அனுபவம் உடையவர்கள்.
உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?
ஒலிம்பிக் தகுதிச் சுற்று இப்போதே தொடங்கிவிட்டதால், ஆரம்பத்திலேயே இடங்களைப் பெற்றால் பின்வரும் போட்டிகளில் அழுத்தம் குறையும். 2027-இல் புது தில்லியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையிலும் ஒலிம்பிக் இடங்கள் வழங்கப்படவுள்ளன.
கடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா துப்பாக்கிச் சுடுதலில் மூன்று பதக்கங்களை வென்றது. அந்த வேகத்தைத் தொடர, தோஹா போட்டி இந்திய வீரர்களுக்கு முக்கிய சோதனைக் களம்.
துப்பாக்கிச் சுடுதல் துல்லியத்தை சார்ந்த விளையாட்டு என்பதால், ஒரே ஒரு சுற்றில் ஏற்படும் சிறு தவறும் தரவரிசையை மாற்றிவிடக்கூடும். அதனால் தோஹாவில் நடைபெறும் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போன்ற பெரிய போட்டிகளில் மன அமைதியும் நிலையான பயிற்சியும் வீரர்களின் வெற்றியை தீர்மானிக்கின்றன.
இதையும் படிக்க: ஆதித்யா உலக சாம்பியன்: யு-19 உலக குத்துச்சண்டையில் ரஷ்ய வீரரை வீழ்த்தி தங்கம்
