கிரிக்கெட்டின் நான்காவது வடிவம் என அழைக்கப்படும் டெஸ்ட் ட்வென்டி கிரிக்கெட் இந்த ஆண்டு நவம்பரில் இலங்கையில் அறிமுகமாகிறது. முதல் தொடர் நவம்பர் 14 முதல் 29 வரை கொழும்பு சிங்கள விளையாட்டுக் கழக (எஸ்எஸ்சி) மைதானத்தில் நடைபெறும். நவம்பர் 30 ஒதுக்கீட்டு நாளாக வைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14 முதல் 29 வரையிலான 16 நாட்கள் கொண்ட இந்தத் தொடர், இலங்கை தலைநகரில் நடைபெறும் முதல் முயற்சியாகும். ஆட்டங்கள் அனைத்தும் ஒரே மைதானத்தில் நடைபெறுவதால், வீரர்களும் ரசிகர்களும் ஒரே இடத்தில் புதிய வடிவத்தை அனுபவிக்க முடியும்.
எப்படி நடைபெறும் டெஸ்ட் ட்வென்டி கிரிக்கெட் ஆட்டம்?
ஒவ்வொரு ஆட்டமும் ஒரே நாளில் 80 ஓவர்கள் கொண்டது. முதல் 40 ஓவர்கள் பகலில், சிவப்புப் பந்தில், வெள்ளை உடையில் ஆடப்படும். அடுத்த 40 ஓவர்கள் மின்னொளியில், வெள்ளைப் பந்தில், வண்ண உடையில் நடைபெறும்.
இரண்டு பகுதிகளுக்கும் இடையே ஸ்கோர் மீண்டும் தொடங்காது; தொடர்ந்து சேர்ந்துகொண்டே செல்லும்.
பாரம்பரிய டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் வரை நீளும்; ஒருநாள் போட்டிகள் ஒவ்வொரு அணிக்கும் 50 ஓவர்கள் கொண்டவை; டி20 போட்டிகள் 20 ஓவர்கள் கொண்டவை. சிவப்புப் பந்து, வெள்ளைப் பந்து, பகல், மின்னொளி ஆகிய அம்சங்கள் ஒரே நாள் ஆட்டத்தில் இடம்பெறுவதே டெஸ்ட் ட்வென்டி கிரிக்கெட் வடிவத்தின் தனித்தன்மை.
முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி 1877-இல் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகளிடையே மெல்போர்னில் நடைபெற்றது. ஒருநாள் போட்டிகள் 1971-இல் தொடங்கின; டி20 வடிவம் 2003-இல் இங்கிலாந்தில் அறிமுகமானது. அந்த வரிசையில் புதிதாகச் சேரும் வடிவமாக இது முன்வைக்கப்படுகிறது.
சிறுவர், சிறுமியர் சேர்ந்து வெற்றி
இந்த வடிவத்தின் தனிச்சிறப்பு, மாணவிகள் அணியும் மாணவர்கள் அணியும் தனித்தனியாக ஆடினாலும் இரு அணிகளின் ரன்களும் ஒரே மொத்த ஸ்கோராகக் கூட்டப்படுவதுதான். அந்தக் கூட்டுத் தொகையே வெற்றியைத் தீர்மானிக்கும். நாணயச் சுழற்சியில் எந்த அணி முதலில் பேட் செய்யும் என்பதுடன், சிறுமியர் ஆட்டமா சிறுவர் ஆட்டமா முதலில் நடக்கும் என்பதும் முடிவாகும்.
இதற்கான “சமநிலை விதி”யின்படி, ஒரு பிரிவில் எடுக்கப்படும் ரன்கள் மற்றொரு பிரிவின் முடிவுக்கும் நேரடியாகக் கணக்கில் சேரும். “வரலாற்றில் முதன்முறையாக சிறுமியரும் சிறுவரும் ஒன்றாக வெல்வார்கள், அல்லது ஒன்றாகத் தோற்பார்கள்” என்று இதன் நிறுவனர் கௌரவ் பஹிர்வானி கூறியுள்ளார்.
160 இளம் வீரர்கள், நான்கு கண்ட அணிகள்
13 முதல் 21 வயதுக்குட்பட்ட 160 வீரர், வீராங்கனைகள் உலகம் முழுவதிலிருந்து தேர்வு செய்யப்பட்டு நான்கு கண்ட அணிகளாகப் பிரிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அணியிலும் 40 பேர் இருப்பார்கள்; அதில் 20 பேர் சிறுமியர், 20 பேர் சிறுவர். இறுதி 160 பேர் இந்த மாதத்தின் பிற்பகுதியில் நடைபெறும் வீரர்கள் தேர்வில் அறிவிக்கப்படுவர். இவ்வாறு அமையும் அணிகளே டெஸ்ட் ட்வென்டி கிரிக்கெட் தொடரின் முதல் பதிப்பில் களமிறங்கும்.
ஐந்து கண்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இளம் வீரர்கள் விண்ணப்பித்தனர். கடந்த 300 நாட்களாக களத்திலும் இணையத்திலும் தேர்வுப் போட்டிகள் நடந்தன. உலகளாவிய தேர்வுக் குழுவுக்கு ராஜ்குமார் சர்மா தலைவராக உள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ், மேத்யூ ஹேடன், சர் கிளைவ் லாய்டு ஆகியோர் ஆலோசனைக் குழுவில் உள்ளனர். அனைத்து ஆட்டங்களும் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாகும். இலங்கை கிரிக்கெட் வாரியமும் எஸ்எஸ்சி கழகமும் ஆதரவு அளித்ததாக நிறுவனர் நன்றி தெரிவித்தார்.
ஆண், பெண் போட்டிகள் பொதுவாகத் தனித்தனியாகவே நடத்தப்படும் நிலையில், இரு பிரிவுகளின் ரன்களையும் ஒரே ஸ்கோராகக் கணக்கிடுவது இந்த முயற்சியை மற்ற வடிவங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.
டெஸ்ட் ட்வென்டி கிரிக்கெட் என்ற புதிய வடிவம் ரசிகர்களிடம் எவ்வளவு வரவேற்பைப் பெறும் என்பது நவம்பர் ஆட்டங்களுக்குப் பிறகே தெரியவரும்.
இதையும் படிக்க: ஆர்யவீர் சேவாக் சதம்: வினூ மங்காட் கோப்பையில் 143 பந்தில் 173 ரன் விளாசல்
