
“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். அதுபோல, அரசியல் மற்றும் சமூகப் பொதுவாழ்வில் நீண்ட பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, வாக்கப்பட்டு இன்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருப்பவர் நமது சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள். அதற்காக அவர் காத்திருந்த காலம் பெரிது.
தாய்வழித் தாத்தா தொடங்கி, தந்தை, சகோதரர், கணவர், மாமனார் என அரசியல் மற்றும் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்தவர்கள் நிறைந்த குடும்பப் பின்னணி இவருக்கு உண்டு. அனைவரிடமும் பாடம் பயின்று இன்று சட்டமன்றத்தில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இத்தனை ஆண்டுகளாக குடும்பத்தினருக்கு பக்கபலமாக இருந்து, அவர்களின் பொதுப்பணிக்கு உறுதுணையாக இருந்தவர், இன்று தானே நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி, சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வருகிறார். ஒரு பெண்ணின் திறமையையும் ஆற்றலையும் புரிந்துகொண்டு, அவரை அரசியல் களத்திற்கு முழு நம்பிக்கையுடன் அழைத்து வந்த அன்புச்சகோதரர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என்னுடைய இதயமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பணிகளில் ஆர்வமும் அனுபவமும் கொண்ட சௌமியா அன்புமணி அவர்கள், இன்று சட்டமன்றத்தில் முன்வைக்கும் கருத்துகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டு, அதனைத் தெளிவாகவும் தைரியமாகவும் கனிவாகவும் எடுத்துரைக்கும் அவரது பேச்சில் அவருடைய அனுபவமும், கற்றலும் வெளிப்படுகிறது.
அரசியலில் பெண்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் இந்தக் காலகட்டத்தில், சௌமியா அன்புமணி போன்ற ஆளுமைமிக்க பெண்கள் மக்கள் பணியில் முன்னுக்கு வருவது வரவேற்கத்தக்கது. என்ன? புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கும்போது இவர் சட்டமன்றத்தில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் இன்னும் பல உயரங்களை அடைந்து, மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று, சிறப்பான மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்! அதோடு பெண்கள் முன்னேற்றத்திற்கும் உதவவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
முன்னாள் முதல்வர் செல்வி
ஜெ .ஜெயலலிதா அவர்களின் நேர்முக உதவியாளர்
J. Poongunrun Sankaralingam
