தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை: மாநில நிதி நிலை குறித்து முக்கிய தகவல்கள்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 18ஆம் தேதி கூடவுள்ளது. இந்தச் சூழலில், மாநில அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து, முதலமைச்சராக ச. ஜோசப் விஜய் பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், “தமிழ்நாடு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. அரசின் கஜானாவை சுத்தமாக துடைத்து வழித்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளனர். அந்த நிலையில்தான் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளேன். உள்ளே போய் பார்த்தால்தான் என்ன இருக்கிறது எனத் தெரியும். உள்ளே போய் பார்த்துவிட்டு, தற்போதைய அரசு என்ன நிலையில் உள்ளது என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன்” என பேசியிருந்தார்.
அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு, 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோதும், 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோதும் மாநிலத்தின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதேபோன்று, தற்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் இன்று நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் தமிழக கடன் இருமடங்கு உயர்வு; ஒருவருக்கு ரூ.1.28 லட்சம் கடன் – வெள்ளை அறிக்கையில் மரிய வில்சன் குற்றச்சாட்டு
வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதி அமைச்சர் மரிய வில்சன் கூறுகையில், “கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் கடன் சுமை இருமடங்காக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தைவிடவும் திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது” என்றார்.
மேலும் அவர், “சொந்த வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. மாநிலத்திற்கு ரூ.78,324 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடியாக உள்ளது. 2025–2026 நிதியாண்டில் தமிழ்நாட்டில் ஒருவருக்கான கடன் ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது. இது 2020–2021 நிதியாண்டில் ரூ.67,087 ஆக இருந்தது” என்று தெரிவித்தார்.
அத்துடன், “மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் கடன் விகிதம் குஜராத்தில் 17.6 சதவீதம், மகாராஷ்டிராவில் 19.7 சதவீதம், கர்நாடகாவில் 23.4 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது 28.3 சதவீதமாக உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
