சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பெண் எம்.எல்.ஏ.

பல்லவி, தனது ஆண் குழந்தைக்கு கட்சியின் சுருக்கப் பெயரான ‘TVK’ என்று பெயரிடப் போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 36 வயதான எம்.ஆர்.பல்லவி வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டார். 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், நடிகர் விஜய் த.வெ.க. கட்சியைத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே அதில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு கட்சித் தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. தேர்தல் பிரசாரத்தின்போது 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் முடிவுகளில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.ராமச்சந்திரனை விட 22,333 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பல்லவி அபார வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக (எம்.எல்.ஏ.) பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, பல்லவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவரது குடும்பத்தினரும், த.வெ.க. தொண்டர்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், தனக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்து, மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த தனது தாய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக, தனது மகனுக்கு ‘TVK’ (டி.வி.கே.) என்று பெயரிட உள்ளதாக பல்லவி எம்.எல்.ஏ. நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *