ஏப்ரல் 23 ஐ எதிர்பார்த்ததை போல் மே 4 ஆம் தேதி எப்போது விடியும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இதற்கு இடையே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்று பல்வேறு கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு மக்களை மிகப்பெரிய குழப்பத்திற்கு தள்ளியுள்ளனர்.

இதில் யாருடைய கணிப்பு ஜெயிக்கும் என்பதுதான் எல்லோருடைய கணக்காக இருக்கிறது.
பொதுவாக கருத்துக் கணிப்புகள் என்பதே போலியான ஒரு பிம்பத்தை உருவாக்குவது தான். இதை வைத்து சில ஆதாயங்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது தான் சிலரின் கணக்கு.

இது உண்மையா? பொய்யா..? என்பது உண்மையான அரசியல் தெரிந்தவர்களுக்கும் தற்போதைய அரசியல் சூழல்களை புரிந்து கொண்டவர்களுக்கும் தான் தெரியும்.


இதை விட்டு விட்டு அவன் அதை சொன்னான் இவன் இதை சொன்னான் இதுதான் ஜெயிக்கும், இதுதான் உண்மையான ரிசல்ட் என்று சொல்வதெல்லாம் போலியான நம்பிக்கை.

ஒரு கட்சி வெற்றி பெறுவதற்கு களப்பணி முக்கியம். ஏதோ தேர்தலுக்கு மட்டும் வந்து ஒரு மாதம் ஓடோடி உழைத்து விட்டு ஐந்து ஆண்டுகள் ராஜபோகமாக வாழலாம் என்று நினைப்பது வெறும் கனவாக இருக்கலாமே தவிர நிஜ வாழ்க்கையில் அது சாத்தியப்படாது.

அரசியல் என்பது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் விழிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தால் தான் உயிர்ப்புடன் இருக்க முடியும். தினமும் அப்டேட்டாக இருந்தால் தான் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் இல்லாவிட்டால் நம்மை Out Date ஆக்கிவிடுவார்கள். இப்படி எத்தனை கட்சிகள் உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தேர்தலைப் பொறுத்தவரை அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்தால் தான் அதற்கான ஊதியத்தை பெற முடியும். நாங்க பெரிய குடும்பம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவே நாங்கள் தான் ஜெயிப்போம் என்று சொல்வதெல்லாம் நடக்காது. இதற்குள் எத்தனை உள்குத்து வேலைகள் இருக்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஒன்றிணைவோம் வா என்று சொன்னார்களே தவிர ஒரு ஒருங்கிணைப்போடு யாரும் சரியாக பணியாற்றாத நிலையில் எப்படி வெற்றி சாத்தியப்படும். அதை இப்போதே அவர்கள் வெளிப்படையாக சொல்ல தொடங்கி விட்டார்கள். அப்படி இருக்கும்போது வெற்றி என்பது…?

இதில் மூன்றாவதாக ஒருவர் வந்து விட்டார் அவர் இவர்களின் வாக்கை எல்லாம் பிரித்து விட்டார் அதுவே எங்களுக்கு அடுத்து வெற்றி என்று சொல்வதெல்லாம் ஒரு ஏமாற்று வேலை. இது தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.


அது எப்படி ஒரு லாஜிக்கே இல்லாமல் எல்லோரும் ஒரே மாதிரியாக ஈ அடிச்சான் காப்பி போல ஒரே நம்பர்ஸ்சா  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்வதாக முடிவு எடுத்த பிறகு எதற்கு இந்த ஏற்ற இறக்கங்கள்… வெல்வோம் 234 என்று சொல்லிவிட்டு போக வேண்டியது தானே…!

இந்தக் கணிப்புகளை சொன்னவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு பெரிய விளம்பரம். இது மிகப்பெரிய ஊடக விபச்சாரம்.

ஒருவரே ஒருவர் ஒரு படி மேலே போய் 130 தொகுதிகளில் சசி ராமதாஸ் கூட்டணி வெல்வதாக கூறியுள்ளார். இதை அவர் நக்கலுக்காக சொன்னாரா இல்லை நகைச்சுவைக்காக சொன்னாரா என்று தெரியவில்லை.

பாவம் நாம் தமிழர் கட்சி சீமான் அவருக்கு யாரும் எந்த கணிப்பும் சொல்லவில்லை…! 234 தொகுதியிலும் எவ்வளவு கத்தி கத்தி பிரச்சாரம் செய்தார் சும்மா அவருக்கு ஒரு 200 தொகுதி கிடைக்கும் என்று சொல்லி இருக்கலாம் இல்லையா….? அவராவது ஒரு நாலு அஞ்சு நாள் சந்தோஷமாக இருந்திருப்பார்.

எல்லாமே ஒரு வேடிக்கையாக இருக்கிறது.
இந்த தேர்தலை பொருத்தவரை மக்கள் பலம், கூட்டணி பலம் இவை எல்லாவற்றையும் தாண்டி பணபலம் மிகவும் ஆதிக்கத்தை செலுத்தி இருக்கிறது.

ஏட்டிக்கு போட்டி போட்டுக்கொண்டு இரண்டு பெரிய கட்சிகளும் ஒவ்வொரு தொகுதியிலும் கோடிக்கணக்கான ரூபாய்களை இரைத்துள்ளது. அந்த நம்பிக்கையில் தான் இருவரும் இருக்கிறார்கள்.
காசு வாங்கிட்டா கரெக்டா ஓட்டு போட்ருவாங்க என்பது அவர்களின் கணக்கு. ஆனால் பெரும்பான்மையான மக்களோ இரண்டு கட்சிகளிலும் பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்களின் வாக்கை வேறு யாருக்கோ…! (ஜனநாயகனுக்கு)செலுத்தி உள்ளார்கள். இதுதான் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெல்லப்போவது ஜனநாயகமா…? பண நாயகமா…? என்பது நாளை தெரிந்து விடும்.

நாளைய வெற்றி யாருக்கு…? படுதோல்வி யாருக்கு…..?

நிமிடங்களை எண்ணிக்கொண்டிருங்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *