ஒரே குட்டையில் ஊறி ஊழலில்  ஊறி  உப்பி முடை நாற்றமெடுத்த இரண்டு திராவிட  கலகங்களும்.. மன்னிக்கவும்  கழகங்களும்  ஒற்றை விரல் புரட்சியில்  காணாமல் போனதைப் பார்த்து கர்ம வீரர் காமராசரின் ஆன்மா இன்று மனம் குளிர்ந்து போயிருக்கும் . கூடவே உற்சாகத்தில்  விசிலடித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் .

ஆரியம் திராவிடம் , இந்தி திணிப்பு , சாதி மதம் , பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மத எதிர்ப்பு  போன்ற மோசடி  மாய வலைகளை இன்றைய இளைய சக்தி ஆர்ப்பாட்டமின்றி  அறுத்தெறிந்திருக்கிறது.

சாதி , மதம் , பணம் , தனிநபர் விருப்பு வெறுப்பு இவற்றைச் சுற்றியேச்  சுழன்று கொண்டிருந்த அரசியலில்
இந்த அசிங்கங்களை  அவலங்களை அமைதியாய்த் தூக்கி எறிந்து, அதிரடி மாற்றம் தந்த
புதியதை விரும்பி
புரட்சி ஏற்படுத்திய தமிழக மக்களுக்கு முதலில் நன்றி.

அரசியலில் சாதி மதம் பணம் , தேவையில்லை. நல்ல மாற்றம் தரும் தலைவனே தேவை என்பதைத் தமிழக தேர்தல் களம் இந்திய தேசத்திற்கே இந்த முடிவுகள் மூலம்  அறிமுகப்படுத்தியிருக்கிற தமிழக மக்களின் உரத்த சிந்தனைக்கு இந்திய ஜனநாயகத்தின் சார்பில் ஒரு ராயல் சல்யூட்

60 ஆண்டுகளாக இரண்டு கழகங்களின்  கொள்ளை அரசியல்  , குடும்ப அரசியல் , தோழி அரசியல் , கூவத்தூர் அரசியல் ,கழகங்களின் முதுகில் சவாரி செய்து அடிவருடும் உதிரி கட்சி அரசியல் இவற்றுக்கெல்லாம் மாற்றாக ஒரு தலைவனை தமிழகம் தேடிக் கொண்டிருந்தது. விஜய்காந்த் , அண்ணாமலை போன்ற தனி ஆளுமைகளுக்குப் பின் திரண்ட மக்கள் கூட்டமே இதற்கு சாட்சியானது. அவர்கள் விட்ட இடத்தை சரியான நேரத்தில் விஜய் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

கட்சித் தொடங்கி குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்த இந்திய திரையுலக கதாநாயகர்களான எம்ஜிஆர் , என்.டி.ஆர் சாதனைகளை முறியடித்தது எல்லாம் சாதாரண சாதனையல்ல. .

விஜய்யின் வெற்றிக்கான காரணங்கள் பல இருந்தாலும் முக்கியமானது அவருடைய தன்னம்பிக்கை. . குடும்பம் , வருமானம் இவற்றை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு விட்ட துணிச்சல் , தற்குறிகளின் தலைவன், குடும்பத்தைக் காப்பாற்றத் தெரியாதவன் , போன்ற நேரடியான தரக்குறைவான விமர்சனங்கள் , சிபிஐ விசாரணை , பட வெளியீட்டிற்கான நெருக்கடி இவற்றை எல்லாம் கண்டு துவளாத நெஞ்சுரம் இவற்றையும்  குறிப்பிட வேண்டும்.

மக்கள் திலகம் எம் ஜி ஆரைப் போன்றே தமிழன் தொடங்கி சர்க்கார்  , மெர்சல் என்று தன் திரைப்படங்களில் தன்னை ஜன நாயகனாக அடையாளப்படுத்திக் கொண்டதும் குறிப்பிடத்தக்கக் காரணம்.” நம் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்” என்று எம்ஜியார் தன் படத்தில் நம்பிக்கையோடு குறிப்பிட்டதைப் போல .. தன் படத்தில் தன் வாகன எண்ணாக TN CM 2026 என்று குறிப்பிட்டதும்  தன்னம்பிக்கையின் உச்சம் .

  எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் “234 ம் நமதே” என்று முழக்கமிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதாவையும் விஞ்சி முதல் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் தனித்து நின்றது கில்லி லெவல் துணிச்சல் .

பணபலம் , ஜாதி பின்னணி , அரசியல் பின்புலம் இல்லாமல் ஆட்டோ ஓட்டுநர், மாற்றுத்திறனாளி ,தன் கட்சியின் தீவிர ரசிகர்கள் , விசுவாசமுள்ள நண்பர்களைத் தேடித் தேடி அதிலும் இளைஞர்களாகத் தேர்வு செய்து “உன்னால் முடியும் தம்பி” என்று நம்பிய மக்கள் சக்தி எம்.எஸ் உதயமூர்த்தியின் கனவை நனவாக்கியிருக்கிறார்

தெருத்தெருவாக பிரச்சாரம் செல்லாமலே, தன் முகம் மற்றும்  தன் சின்னத்தை வைத்தே நகரம் முதல் கிராமம் வரை உள்ள மக்களைத் தன் பக்கம் தக்கவைப்பதெல்லாம் ‘விஜய் மாஜிக்’ என்று இனி அழைக்கப்படலாம். விசில் நேரடியாக நின்றிருந்தால் எடப்பாடியும் கவிழ்ந்திருப்பார் என்பதே உண்மை .

சரி கட்சி வெற்றி பெற்று விட்டது .ஆட்சி வெற்றி பெறுமா ?

உண்மைதான். தளபதி முன் நிற்கும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல .

அறுதிப் பெரும்பான்மை இல்லை .அனுபவசாலிகள் இல்லை. கூட்டணி பலமும் இல்லை . கட்சி கட்டமைப்பு இல்லை. கட்சிக்கும் பெரிய சொத்தில்லை. தன் கட்சி பிரதிநிதிகளும் செல்வாக்கு உடையவர்கள் இல்லை  இது ஒரு பக்கம்.

மறுபக்கம் காயப்பட்ட புலிகளாய் பாய்வதற்கு இரண்டு கட்சிகளும் எதிரணியில் ஓரணியாய் நிற்கின்றன. இரு கழகங்களும் நினைத்தால் சபாநாயகர் தேர்விலேயே ஆட்சியைக் கவிழ்த்து விட முடியும். . அப்படி செய்ய மாட்டார்கள் என்று நம்புவோம் .

பா.ஜ.க கொள்கை எதிரி என்று சொல்லி ஆரம்பத்திலேயே மத்திய அரசின் ஆதரவை இழந்து இருப்பது கவனிக்க வேண்டிய மிகப் பெரிய பிரச்சனை .ஏற்கனவே உள்ள கரூர் உயிரழப்பு சம்பவ வழக்கு வேறு தலைமேல் கத்தியாக நிற்கிறது.ஆதரவு என்கிற பெயரில் நடக்கப் போகும் உருட்டல் மிரட்டல்களை எப்படி சமாளிக்கப் போகிறார் ?

இதற்கும் மேல் விஜய் கட்சி தந்திருக்கும் வாக்குறுதிகள்தான் விஜய் ஆட்சிக்கான பெரிய சவால்கள் .

கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தில் ..இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எப்படி நிதியாதாரத்தைத் திரட்டப்போகிறார் ?

மது விற்பனையை கூட்டாமல் , பஸ் கட்டணம் , மின் கட்டணம்  பால் விலை , வீட்டு வரி , குடிநீர் வரி இவற்றை உயர்த்தாமல் எப்படி நிதியைப் பெருக்கப்போகிறார் ?

மக்களைப் பாதிக்காமல் நிதியாதரத்தைக் கூட்ட சில நடவடிக்கைகளை விஜய் அரசு உடனடியாய் முன்னெடுக்க வேண்டும் .

தங்களது சுயநலத்திற்காக தேவையற்றத் திட்டங்களை அறிமுகம் செய்து  அரசைத் தவறாக வழிநடத்தும் அதிகாரிகளைத் தள்ளி வைக்க வேண்டும்.

கல்வி வேலைவாய்ப்பு , கிராம்ப புற வளர்ச்சி , உணவுப் பொருள் வழங்குதல், சாலைப் போக்குவரத்து போன்ற அடிப்படை விஷயங்களை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பண பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இடைத் தரகு , கையூட்டு பெறுவது ஒழிக்கப்பட வேண்டும்

பூங்காக்கள் கட்டுவது , பாலங்களை அழகுபடுத்துவது , நினைவிடம் கட்டுவது , சாலைகள் மீது சாலைகள் போடுவது , சிலைகள் வைப்பது , அரசு விழாக்கள் நடத்துவது , விளம்பரம் தருவது போன்ற தேவையில்லாதவற்றிற்கு அரசு பணம் செலவிடப்படுவதை  நிறுத்த வேண்டும் .

அரசு கட்சி சார்பில்லாத அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறை , மாவட்ட ஆட்சியர்கள் , சமூகசிந்தனையாளர்கள் , சமூக சேவை இயக்கங்களைச் சார்ந்தவர்கள் , அறப்பணிக்கு உதவும் தொழிலதிபர்கள் அடங்கிய ஒரு ஆலோசனைக் குழுவை மாவட்டந்தோறும் ஏற்படுத்தி அவர்கள் தரும் யோசனைகள் திட்டங்களை செயல் படுத்த விஜய் அரசு முன் வந்தால் மக்களுக்கும் அரசுக்கு மான இடைவெளி குறையும். . உறவு மேம்படும் .இதன் மூலம் உண்மையான மக்களாட்சி மலரும் .

எந்த ஒரு ஆட்சிக்கும் முதல் ஆறு மாதங்களே தேர்வு காலம் . அதற்குள் அதன் செயல்பாட்டுக்கான மதிப்பெண் தெரிந்துவிடும்.
விஜய் எவ்வளவு மதிப்பெண் பெறப் போகிறார் ? என்பது அவரது தனிப்பட்ட அணுகுமுறையிலிருந்து தெரிந்துவிடும் .

எது எப்படியோ? அறுபது ஆண்டுகள் கழகங்களின் நிழல் படிந்த தமிழகத்தில் புதிய வெளிச்சமாய் புறப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் வெற்றுக் கழகமாக மாறாமல் இருக்க உரத்த சிந்தனையுள்ள ஒவ்வொருவரும்   விசில் அடிப்பதோடு நின்றுவிடாமல் .. அதன் செயல் திட்டங்களுக்கு ஒன்றிணைந்து  கைக் கொடுக்க வேண்டும் .தமிழகத்தை தலை நிமிர வைக்க வேண்டும்.

• உதயம் ராம்
• உரத்த சிந்தனை
• 06.05.2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *