தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது.

அதேபோல் யார் ஜெயிப்பார்கள்…?  யார் தோர்ப்பார்கள்…? என்கிற கருத்துக் கணிப்புகளும், கருத்து திணிப்புகளும் தமிழக அரசியலை மேலும் சூடாக்கி வருகிறது.

இப்போது யார் கருத்துக் கணிப்பு நடத்துவது என்கிற விவஸ்தைஏ இல்லாமல் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதை போல் ஆளாளுக்கு தேர்தல் முடிவுகளை சொல்லத் தொடங்கி விட்டார்கள். எல்லாமே பேமென்ட் முடிவுகள்…! அதனால் இதில் யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய் என்கிற குழப்பம் மக்கள் மனதில் நீடிக்கிறது.

தற்போது இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் உண்மையான கடும் போட்டியே  அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் தான்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் புதிதாக முளைத்திருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் அமரும் தகுதியும் திறமையும் அந்த கட்சிக்கு கிடையாது.

விஜயின் வருகை சீமானின் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியை வேகமாக சரித்தாலும் அது வெற்றி பெறும் சக்தியாக இல்லை. தமிழக வெற்றி கழகத்தை நாம் இன்னொரு மக்கள் நீதி மையமாகத்தான் வைத்துக்கொள்ள முடியும். திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் B Team ஆகத்தான் இதை பார்க்க முடியும்.

நடிகர் விஜயின் ஒவ்வொரு செயல்பாடும் அவரோ அவரது கட்சியை சார்ந்தவர்களோ வெற்றி பெற வேண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் போட்டியிடுவதாக தெரியவில்லை. அதற்கான அடிப்படையான எந்த வேலைகளையும் அவர்கள் முறையாக முழுமையாக செய்யவில்லை. ஒரு கவர்ச்சியில் வாக்குகள் தானாக வந்து விழுந்து விடும் என்று எண்ணுகிறார்கள்.

20 கட்சி கூட்டணி வைத்தவர்களே தடுமாறும் போது இவர்கள் தனியாக நின்று ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியும் என்று நம்புவது மிகப்பெரிய முட்டாள்தனம்.

அவர் போட்டியிடுகின்ற தொகுதியிலேயே முறையான பிரச்சாரம் இல்லை எனவே விசில் சின்னம் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறுவது கடினம் தான். நாம் தமிழர் கட்சியின் நிலையும் அதேதான். சீமானின் வாக்கு வங்கி கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் கடுமையாக சரியும். எனவே இந்த இரு கட்சிகளும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் ஒரு போட்டியே இல்லை.

இப்போது வெற்றி யாருக்கு என்கிற போட்டி NDA கூட்டணிக்கும் INDI திமுக கூட்டணிக்கும் தான். இதை தொகுதி வாரியாக சென்று சர்வே எடுத்து தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. இவர்கள் செயல் படும் வேகத்தை வைத்து கணித்து விடலாம்.

2019 ல் உருவான தி.மு.க கூட்டணி 2026லும் அப்படியே தொடர்கிறது. 2019, 2021, 2024 என்று பல தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் 2026தேர்தலில் இன்னும் சில உதிரி கட்சிகளை சேர்த்துக்கொண்டு களத்திற்கு வந்துள்ளார்கள் கூட்டணி பலம் கை கொடுக்கும் என்கிற நம்பிக்கையில்.

2021 மற்றும் 2024 தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்ததற்கு காரணமே சரியான கூட்டணி அமையாது மற்றும் கட்சிகளுக்குள் இருந்த பிரிவினைகள் தான். இதே நிலை நீடித்தால் நாம் மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிடலாம் என்கிற மனநிலையில் தான் திமுக இருந்தது.

அதனால் தான் ஓராண்டுக்கு முன்பே பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்த போது இது பொருந்தா கூட்டணி, அடிமை கூட்டணி என்றெல்லாம் விமர்சித்தார்கள். இவர்கள் ஒன்றிணைந்ததன் அச்சம் தான் இன்னும் பலரை கூட்டணிக்குள் இழுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


மெகா கூட்டணி அமைத்தால் மெகா வெற்றி பெறலாம் என்று போனவர் வந்தவர்கள் எல்லோரையும் அழைத்து கட்சிக்குப் புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் போதுமான எல்லாவற்றையும் கொடுத்து இந்த முறையும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது திமுக.

இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணிக்குள் இன்னும் யார் வருவார்கள் தேமுதிகவைப் போல் யார் வெளியே போவார்கள் இவர்கள் இன்னும்  பேச்சு வார்த்தையை நடத்தவில்லையே என்ன செய்யப் போகிறார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில்  எவ்வித இழுப்பறியும் இல்லாமல் அதிமுக, பாஜக, பாமக, அமமுக இன்னும் சில கட்சிகள் ஒரே நாளில் போட்டியிடும் இடங்கள் குறித்து அறிவித்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இவர்களுக்கு முன்பாக மெகா கூட்டணி அமைத்த திமுகவால் தொகுதிகளை உறுதி செய்ய முடியவில்லை. இதில் பெரிய தடுமாற்றமே இருந்தது. அந்த தடுமாற்றம் இப்போது வரை நீடிக்கிறது.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள் அதற்கு ஏற்றார் போல் திமுக கூட்டணியின் செயல்பாடுகள் கோணல் மானலாகவே முடிந்துள்ளது.

இந்த தேர்தலை பொருத்தவரை திமுக தனது சொந்தக் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ததில் தொடங்கி கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு வேட்பாளர் தேர்வு என்று எல்லாவற்றிலும் சொதப்பி உள்ளது. வழக்கமாக இவர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கை என்பது கதாநாயகன் ரேஞ்சுக்கு உயர்ந்திருக்கும் என்று சொல்வார்கள் ஆனால் இந்த முறை இந்த அறிக்கைகள் காமெடியனாக தான் காட்சி தருகிறது. மக்கள் நம்பும் படியான அறிக்கையாக இது இல்லை.

அதேபோன்று தேர்தல் விளம்பரங்களும் கடந்த முறை பேசப்பட்டது போன்று ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறாரு போன்று எடுபடவில்லை.

அதிமுகவின் ஏழைகள் சிரிக்கணுமுன்னா இரட்டை இலை ஆளனும்.
தமிழ்நாடு செழிக்கணும் என்றால் எடப்பாடி ஆளனும். என்கிற பாடலுக்கு கிடைத்த வரவேற்பு திமுகவின் பாடலுக்கு கிடைக்கவில்லை.

இவர்கள் விளம்பரத்தில் சொல்வது போல் கதையாக தான் எல்லாம் காட்சி தருகிறது. ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்பதை காட்டிலும் ஸ்டாலின் தோற்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற கோஷம்தான் தமிழகமெங்கும் கேட்கிறது.

அந்த அளவிற்கு திமுகவின் மீது எதிர்ப்பலை தமிழகமெங்கும் வீசுகிறது.


எடப்பாடியின் பிரச்சாரம் ஈடுபட்ட அளவிற்கு ஸ்டாலின் பிரசாரத்தில் ஒரு எழுச்சி இல்லை. அண்ணாமலை மக்களை ஈர்த்த அளவிற்கு உதயநிதிக்கு வரவேற்பு இல்லை. அன்புமணியை வரவேற்ற அளவிற்கு கனிமொழியை கண்டுகொள்ளவில்லை. கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் களத்திலே இல்லை.

கூட்டணி மற்றும் கட்சி தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை யாரிடமும் ஒரு உற்சாகம்  இல்லை. கடைசி நேரத்தில் தான் களத்திற்கு வந்தார்கள் சிலர்.

ஆனால் NDA கூட்டணி அப்படி இருக்கவில்லை தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடியார் தொடங்கி கூட்டணி கட்சியினர் அனைவரின் பிரச்சாரமும் மக்களை கவர்ந்துள்ளது. இரண்டு கட்சிகளும் காசு கொடுத்து தான் கூட்டத்தை சேர்த்து இருந்தாலும் இந்த எழுச்சி அந்தக் கூட்டத்தில் இல்லை.

இரண்டு பேர் கூட்டத்திலும் யார் சொல்வது உண்மை யார் சொல்வது பொய் என்பதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். தீர்ப்பு எழுத வேண்டிய 23ஆம் தேதியை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இதற்கு இடையே இவை எல்லாவற்றையும் தாண்டி இரண்டு கட்சிகளும் ஒவ்வொரு தொகுதியிலும் கோடிக்கணக்கான ரூபாய்களை தாராளமாக இறைத்துள்ளது. வாக்காளர்களின் பாக்கெட் நிரம்பும் வகையில் பணமழை ஒவ்வொரு வீட்டிலும் பொழிந்துள்ளது.
மக்கள் காசைப் பார்த்து ஓட்டு போடுவார்களா…? இல்லை நாட்டின் நலனை பார்த்து ஓட்டு போடுவார்களா..? என்பது மே நான்காம் தேதி தெரிந்துவிடும்.

என்னதான் கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் மக்கள் தாங்கள் விரும்பியர்களுக்கு தான் வாக்களிப்பார்கள். மாற்றத்தை நோக்கி முன்னேறி விட்டார்கள் என்று மனதார நம்பலாம்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *