கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மதியழகன் அவர்கள் சிட்டிங் எம்எல்ஏவாகவும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள நிலையில், அவரை ஆதரிக்கும் வகையில் நாகரசம்பட்டி பகுதியில் பெண்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோவில், வாக்கு சேகரிப்பு நடவடிக்கையின் போது பொதுமக்கள், குறிப்பாக பெண்களுக்கு ₹100 வழங்கப்படுவது போன்ற காட்சிகள் தெளிவாக இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் அரசியல் வட்டாரங்களில் கடும் பரபரப்பு நிலவுகிறது.
இந்த வீடியோ உண்மையானதுதான் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவதுடன், இது தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதற்கான சாட்சியமாக பார்க்கப்படுகிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
G R பாஸ்கர், கிருஷ்ணகிரி மாவட்டம்
