ஒரு சகோதரனாக கேட்டுக்கொள்கிறேன். தனியார் பள்ளிகள் முடிந்த அளவிற்கு தங்களுடைய கட்டணத்தை குறையுங்கள் என்று அமைச்சர் ராஜ் மோகன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பள்ளி கட்டணத்தை தங்களுடைய பலகையில் வெளிப்படையாக வெளியிட் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் இயக்ககம் சார்பில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. அதில் தலைமை ஏற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் பேசியதாவது:

தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர் என்ற கருத்து இருக்கின்றது. ஆனாலும், குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் எட்டாக் கனியாக இருப்பவருக்கும் கல்வியைக் கொடுக்கிறீர்கள்.

பள்ளிகளை நடத்துவது லாப கணக்கு அல்ல

நீங்கள் கடந்து வந்த பாதை கரடுமுரடாக இருந்திருக்கலாம். சிலர் நகைகளை அடமானம் வைத்தும், மிகுந்த சிரமங்களுக்கு இடையேயும் தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது லாப கணக்கு அல்ல, புண்ணிய கணக்கு.

தனியார் பள்ளிகள் ஆண்டு புதுப்பிப்பு, தடையில்லாச் சான்று என எதற்காக, எந்த அதிகாரி வந்தாலும் லஞ்சம் கொடுக்காதீர்கள். ஒரு ரூபாய் கூடத் தர வேண்டாம். எந்த அரசியல் கட்சிக்கும் எந்த அரசியல் பின்புலத்தோடு வந்தாலும் கெட் அவுட் சொல்லுங்கள்.

ஜூலை 1 முதல் ஆன்லைனில் நடைமுறை

குழந்தைகளின் பாதுகாப்பை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். ஜூலை 1 முதல் எல்லா நடைமுறைகளுமே 100 சதவீதம் ஆன்லைனில் மாற்றப்படும். கல்வித் தரகர்கள், அரசியல்வாதிகள் தலையீடு இருக்காது.

பதிலுக்கு உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன். அமைச்சராக இல்லை, சகோதரனாகக் கேட்கிறேன். உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது, யாரும் எந்தக் குடைச்சலும் தர மாட்டார்கள். பதிலுக்கு பள்ளிக் கட்டணத்தைக் குறைக்கப் பாருங்கள். ஏழைக் குழந்தைகளும் உங்களின் பள்ளிகளில் படிக்கட்டும். பள்ளி கட்டணத்தை உங்களுடைய பலகையில் வெளிப்படையாக வெளியிடுங்கள். இதன் மூலமாக உங்கள் பள்ளிகளை தேடி மாணவர்கள் அதிக அளவில் வருவார்கள்.

அரசுப் பள்ளிக் குழந்தைகளைப் போல தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் எங்கள் வீட்டுக் குழந்தைகள்தான்’’ என்று அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *