
ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ரொக்கப் பணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் யூபிஐ மூலம் பணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ரொக்கப் பணம் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஃபாஸ்டாக் இல்லாமல் வாகனங்கள் சுங்கச் சாவடிக்குள் நுழைந்தால் பயனர்கள் யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம் என்று அமைச்சகம் கூறியுள்ளது. இருப்பினும், அவர்கள் பொருந்தக்கூடிய சுங்கக் கட்டணத்தைப் போல் 1.25 மடங்கு செலுத்த வேண்டும்.
சுங்கச் சாவடிகளில் நீண்ட வரிசைகளைக் குறைப்பதையும், பயணிகளுக்கு நெடுஞ்சாலைப் பயணத்தை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 10ஆம் தேதி முதல் சுங்கச் சாவடிகளில் ரொக்கப் பணம் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், ஃபாஸ்டாக் முதன்மை சுங்கக் கட்டண முறையாகத் தொடரும் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார். ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்களுக்கு யூபிஐ ஒரு மாற்று கட்டண முறையாகச் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு ஓட்டுநரும் ஃபாஸ்டாக் இல்லாமல் சுங்கச் சாவடிக்குள் நுழைந்து யூபிஐ மூலம் சுங்கக் கட்டணம் செலுத்தத் தேர்வுசெய்தால், விதி 4-இன் துணை விதி (2)-இன் படி, அந்த வகை வாகனத்திற்குப் பொருந்தக்கூடிய சுங்கக் கட்டணத்தைப் போல் 1.25 மடங்கு செலுத்த வேண்டும். வாகனத்தின் உரிமையாளர் அல்லது ஓட்டுநர் இந்த விதியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தத் தேர்வுசெய்யவில்லை என்றால், விதி 14-இன் படி அத்தகைய வாகனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமீபத்தில் தனது ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸுக்கான சந்தாதாரர்களின் எண்ணிக்கையை ஐந்து மில்லியனைத் தாண்டியுள்ளது என்று கூறியிருந்தது. இது பயனர்களை ஆண்டுக்கு 3,000 ரூபாய் மட்டும் செலுத்தி 200 சுங்கச் சாவடி பயணங்கள் செய்ய அனுமதிக்கிறது. ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இந்த பாஸ் மூலம் மொத்தம் 265.5 மில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் 1,150க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன என்பது குறிபிடத்தக்கது.
சுங்கச் சாவடிகளில் கொண்டுவரப்படும் இந்த சீரான பணமில்லா கொள்கை அனைவருக்கும் பொருந்தும். இது முக்கிய சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் முறையில் நாடு தழுவிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஏப்ரல் 1 முதல் வர்த்தக மற்றும் பயணிகள் வாகனங்களின் விலை உயர்வைத் தொடர்ந்து தற்போது அமலுக்கு வரும் சுங்கக் கட்டண விதிமுறைகள் வாகன ஓட்டிகளுக்கு சற்று நெருக்கடியைத் தரலாம். பணத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் அல்லது டிஜிட்டல் கட்டண வசதிகள் இல்லாத பயனர்களுக்கு இந்த மாற்றம் குறுகிய கால சிரமத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துகின்றன என்றும், ரொக்கப் பணத்தை ஏற்கும் கவுண்டர்கள் இல்லாதது இந்த மாற்றத்திற்குத் தயாராக இல்லாதவர்களை ஆரம்பத்தில் மெதுவாக்கக்கூடும் என்றும் போக்குவரத்து துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும், சுங்கக் கட்டண வசூலில் ஏற்படும் கசிவுகளைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை அவசியம் என்று அரசு கருதுகிறது. எனவே இந்த விதிமுறைகளுக்கு மக்கள் பழகித்தான் ஆகவேண்டும்.
