சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது.அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். தவெக அமைச்சரவையில் வேலுமணி, சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவினரை அமைச்சரவையில் இணைப்பது தொடர்பாக செங்கோட்டையன் சொல்லியுள்ள கருத்து வேலுமணி டீமுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விமான நிலையத்தில் தவெக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் தான் முடிவு செய்வார். அவர் நினைப்பதை நாங்கள் நிறைவேற்றுவோம். ஊழல் இல்லாத ஆட்சியை எப்படி வழங்குவோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும் ஒருமுறை 7 பேரை தான் முதலில் அமைச்சராக்கினார். பிறகு படிப்படியாக விரிவாக்கம் செய்தார்.

எடப்பாடிக்கு சரியான பாடம்

அதேபோல தான் தவெக ஆட்சியும். இது வழக்கமான நடைமுறை. அமைச்சரவையை எப்படி இயக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் தான் முடிவு செய்வார். நான் என்று ஒருவர் நினைத்தால் ஆண்டவன் தான் என்று பார்த்துக் கொள்ளாவர். அதுதான் அதிமுகவின் நிலை. புரட்சி தலைவர் உருவாக்கி, புரட்சி தலைவி கட்டிக்காத்த அதிமுக, இன்று எடப்பாடியால் வலுவிழந்துள்ளது. தான் ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார். காலத்தின் கட்டாயம் அவருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்.

நெருக்கடிகளை சமாளிக்க கூடிய திறமை முதலமைச்சருக்கு உள்ளது. தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக அவர் இருப்பார். அரசு பொருளாதாரத்தை படிப்படியாக ஆய்வு செய்துதான் சீர் செய்ய முடியும். தவெக ஆட்சிக்கு வந்து, அமைச்சரவை இலாகா ஒதுக்கப்பட்டு 2 நாட்கள் தான் ஆகிறது. இத்தனை கேள்விகள் கேட்டால் எப்படி. உங்கள் வீட்டு பொருளாதார நிலைமையை உடனடியாக சொல்ல முடியுமா. 200 யூனிட் மின்சாரம், மகளிர் பாதுகாப்பு, போதை ஒழிப்பு ஆகியவற்றில் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோயில்கள், கல்வி நிறுனங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை மக்கள் வரவேற்றுள்ளனர். பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இவ்வளவு சாதனைகளை செய்த ஒரே அமைச்சர் விஜய் தான்” என்றவரிடம் தவெக அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு செங்கோட்டையன், “நீங்கள் தான் சொல்ல வேண்டும். நாங்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை” என்றார். இந்த பதிலால் அதிமுகவில் வேலுமணி, சி.வி. சண்முகம் அணியினர் அதிர்ச்சியாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *