
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு தொகுதி தரப்படவில்லை என்றதும் முக நூல்களிலும், சமூக வலை தளங்களிலும் கட்சியைக் கடந்த அவரது ஆதரவாளர்கள் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் ஆதங்கத்தோடும், கோபத்தோடும் பதிவுகள் செய்து வருகின்றனர்.
அது நியாயமான கோபம்தான். காரணம் கழகங்களுக்கு மாற்றாக துணிச்சலுடன் களமிறங்க யார் வந்தாலும் தமிழக மக்கள் வரவேற்புத் தர காத்திருக்கிறார்கள். இதற்கு விஜய்காந்த், விஜய் சீமான் போன்றவர்களுக்குத் திரளும் கூட்டங்களே சாட்சி. அது போன்றே அண்ணாமலை மீதும் எதிர்பார்ப்புக் கூடிக் கொண்டே போகிறது.
தீண்டத்தகாத கட்சியாய் ,.. பத்தோடு பதினொன்றாக இருந்த பா.ஜ.கவிற்கு.. அறைகளில் அமர்ந்து அறிக்கை விடுதைத் தாண்டி வெளியே வராத ..வெளியே வந்தாலும் பத்து பேரைக் கூட தங்கள் பின்னால் கூட்டத் தெரியாத தலைவர்கள் நிரம்பிய தாமரைக் கட்சியை .. தனியொருவனாய் தமிழகமெங்கும் மூலை முடுக்கெல்லாம் மலரச் செய்து , கட்சிக்கு முகவரி தந்தவர் அண்ணாமலை என்பதை எவராலும் மறுக்க முடியாது .மறக்கவும் முடியாது.
அதிமுகவுடன் சேர்ந்து கட்சியை வளர்ப்பதற்காக எடப்பாடியாரின் அருளைப் பெற கட்சியால் பலி கொடுக்கப்பட்டவர் அண்ணாமலை என்ற அனுதாப அலை அவரை நேசிக்கும் அனைவரிடமும் இப்போது வரை இருக்கிறது.
நேர்பட பேசுதல் , ஆதாரங்களை அடுக்குதல் , கடுமையான உழைப்பு துணிச்சலான அணுகுமுறையில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதவராய் மாறியுள்ள அவரது வளர்ச்சியை ஆரம்பத்திலிருந்தே விரும்பாத பா.ஜ.க வின் பழைய பெருச்சாளிகளால் அவர் ஒதுக்கப்பட்டாரா ? இல்லை.. பிடிக்காதவர்கள் மத்தியில் நமக்கென்ன வேலை என்று அவரே ஒதுங்கி விட்டாரா ? என்பதற்கு இப்போது விடை சொல்வது கடினம்.
கிராமம் கிராமமாக சென்று தாமரையை .. பாமரர்களிடம் கொண்டு சேர்த்தவர் என்பதாலும் , கட்சியின் மேலிடத்தில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளவர் என்பதாலும் அவரை தமிழக அரசியல் இருந்து ஓரம் கட்ட கழகங்களை விட அதிகம் விரும்பியவர்கள் அவருடையக் கட்சிக்காரர்களே.
இந்த கசப்பான உண்மை இந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை , தொகுதி பங்கீடு , போன்றவற்றிலிருந்து அவர் விலக்கப்பட்டதிலிருந்தே தெரிந்து விட்டது.
இவற்றால் அண்ணாமலையின் அத்தியாயம் முடிந்துவிட்டதா என்று கேட்டால் இனிதான் அவரது ஆட்டமே ஆரம்பிக்கிறது என்று சொல்லலாம்.
தங்கள் வெற்றிக்காக தங்கள் தொகுதியை விட்டு வெளியே வர பா.ஜ.கவில் எந்த வேட்பாளரும் இப்போது இல்லை. அப்படியே இருந்தாலும் எவருக்கும் அண்ணாமலை அளவுக்கு மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றலும் , விரல் நுனியில் பதில் தரும் சாமர்த்தியமோ இல்லை என்பதால் அண்ணாமலையை முழு நேர பிரச்சார பீரங்கியாக பயன்படுத்த தலைமையிடம் அழுத்தம் தருவார்கள்.
கோவையில் அதிமுக வேட்பாளர்கள் தனித்தனியே அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டிருப்பது ஒன்றே அவரது முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
வேட்பாளர் பட்டியல் வெளியான உடனேயே
“தொகுதி எதற்கு தொண்டனாய் பணியாற்றுவேன்” என்ற அவரது உடனடி அறிக்கை அவருடைய அரசியல் பக்குவத்தையும், கொள்கைப்பிடிப்பையும் , இலக்கை நோக்கிய அவரது
இலட்சியத்தோடு கூடிய ஈடுபாட்டையும்,
வெளிப்படுத்துகிறது.
அண்ணாமலை இருந்திருந்தால் இன்னும் சில தொகுதிகள் கிடைத்திருக்கும் , வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளுக்காகக் குரல் கொடுத்திருப்பார் என்ற கட்சிக்குள்ளேயே கேட்கும் முணுமுணுப்பு அண்ணாமலையின் நிர்வாகத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி .
தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் இடம் பிடிக்காவிட்டால் என்ன ? அண்ணாமலை அண்ணாமலை என்று எதிர்கட்சிகளை அலறவிடுவதிலும் .. அண்ணாமலைக்கு சீட் இல்லையாமே என்று பொது மக்களிடையே ஏக்கத்தை தாக்கத்தை ஏற்படுத்தியதிலும் அண்ணாமலைக்கு வெற்றி மேல் வெற்றி தான் .
– உதயம் ராம்
