அதிமுகவில் உட்கட்சி மாற்றங்கள் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம். ராமு அவர்களுக்கு, ஓசூரில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் கட்சியின் 26 மாவட்ட செயலாளர்களை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பி. பாலகிருஷ்ணா ரெட்டி மாற்றப்பட்டு, அந்தப் பொறுப்பிற்கு எம். ராமு நியமிக்கப்பட்டார்.

பாலகிருஷ்ணா ரெட்டி, சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பின் முதன்முறையாக ஓசூர் வருகை தந்த எம். ராமுவிற்கு, அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், ராயக்கோட்டை சாலை சந்திப்பில் அமைந்துள்ள அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு எம். ராமு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கிய அவர் பேசுகையில், “தன்னைப் போன்ற சாதாரண தொண்டனை நம்பி இந்தப் பொறுப்பை வழங்கிய கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும், கட்சியின் வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் பணியாற்றப் போவதாகவும்” நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

E. V. Palaniyappan. Hosur Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *