
2026 மார்ச் மாதத்தில் இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி ) வசூல் ரூ. 2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.8 சதவீதம் என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி விகிதம் சீரமைக்கப்பட்ட பிறகு, வசூல் ரூ. 2 லட்சம் கோடியைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும். இது வலுவான நுகர்வு மனநிலையையும், ஆண்டு இறுதியில் பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சியையும் காட்டுகிறது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, (ரீஃபண்டுக்குப் பிறகு) நிகர ஜிஎஸ்டி வருவாய் 8.2 சதவீதம் அதிகரித்து ரூ. 1.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ரீஃபண்ட் தொகை 13.8 சதவீதம் அதிகரித்து ரூ. 22,074 கோடியாக அதிகரித்துள்ளது. முழு நிதியாண்டிற்கான (ஏப்ரல்-மார்ச்) மொத்த ஜிஎஸ்டி வசூல் 8.3 சதவீதம் அதிகரித்து ரூ. 22.27 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், பிப்ரவரி 1 முதல் ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி நிறுத்தப்பட்டது. மேலும், புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரி மற்றும் பான் மசாலா மீதான சுகாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பு செஸ் ஆகியவற்றின் புதிய விகிதங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதங்களில், 2025ஆம் ஆண்டின் இழப்பீட்டு செஸ் வருவாய் சேர்க்கப்படவில்லை.
மார்ச் மாதத்தின் மொத்த வசூலில், மத்திய ஜிஎஸ்டி (CGST) ரூ. 40,549 கோடி, மாநில ஜிஎஸ்டி (SGST) ரூ. 53,268 கோடி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) ரூ. 1.06 லட்சம் கோடி ஆகியவை அடங்கும். மார்ச் மாதத்தின் ஜிஎஸ்டி வசூலானது, வழக்கமான ஆண்டு இறுதி உயர்வைப் போலத் தோன்றாமல், உருவாகி வரும் வெளிப்புறத் தடைகள் இருந்தபோதிலும் பொருளாதாரத்தின் முக்கிய தேவை இயந்திரம் அப்படியே உள்ளது என்பதற்கான ஒரு சமிக்ஞையாகவே தெரிகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மொத்த வசூல் ரூ. 2 லட்சம் கோடியைத் தாண்டி, 10 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதும், நிகர வருவாய் சுமார் ரூ. 1.78 லட்சம் கோடியாக இருப்பதும், நிலையான நுகர்வு, மேம்பட்ட இணக்கம் மற்றும் மிகவும் திறமையான வரி முறையைக் குறிப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு வருவாய் 5.9 சதவீதம் உயர்ந்து ரூ. 1.46 லட்சம் கோடியாக இருந்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதிகள் மூலம் கிடைத்த மொத்த ஜிஎஸ்டி வருவாய் 17.8 சதவீதம் உயர்ந்து ரூ. 53,861 கோடியாக இருந்துள்ளதாக அரசு தரப்பு புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
முன்னதாக பிப்ரவரி மாதத்தில் ரூ. 1.88 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட 375 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிக் குறைப்பை செப்டம்பர் 3 அன்று அரசு அறிவித்தது. இந்த மாற்றங்கள் நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடியின் தாக்கத்தை மார்ச் மாத புள்ளி விவரங்கள் இன்னும் பிரதிபலிக்கவில்லை என்றும், இனிவரும் காலங்களில் எச்சரிக்கையான போக்கே இருக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
