மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு உரிமையியல் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கொண்டாடினர். ஆவணங்களின் அடிப்படையில் பாமகவின் மாம்பழம் சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி தரப்பே பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எதன் அடிப்படையில் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் ஒரு ஃபிரண்ட்லி மேட்ச் ஆடியுள்ளது என்று கருத்து கூறியது. ராமதாசின் கோரிக்கை தவறானது மேலும், சின்னம் தொடர்பாக மீண்டும் சிவில் நீதிமன்றத்தை நாடி இரண்டு நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிவில் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்ட அடுத்த மூன்று நாட்களுக்குள் வழக்கை விசாரித்து முடிவு சொல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதன்படி ராமதாஸ் தரப்பில் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் வைத்த வாதத்தில், தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் பாமகவின் சின்னத்தை முடக்க முடியாது. அங்கீகாரம் இல்லாத பாமகவால் மாம்பழம் சின்னத்தை உரிமையாக கோர முடியாது. ராமதாஸின் கோரிக்கையே தவறானது. தள்ளுபடி செய்த நீதிமன்றம் அன்புமணி அல்லது ராமதாஸ் என்ற தனிநபர்களுக்காக மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் சின்னத்தை முடக்க நீதிமன்றத்திற்கு அனுமதியில்லை. பொது சின்னமான மாம்பழத்திற்கு முதலில் உரிமை கோரியவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி தீர்ப்பளித்த உரிமையியல் நீதிமன்றம், ராமதாஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு உரிமையியல் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ராமதாஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *