
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் பல வருடங்களாக கோரிக்கை வைத்தார்கள். அதனையடுத்து, ‘அரசியலுக்கு வருவது உறுதி. எனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும்’ என அறிவித்தார். இதனால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள். அதனையடுத்து சில மாதங்களில், ‘அரசியலுக்கு வரும் முடிவிலிருந்து பின் வாங்குகிறேன்’ என கூறி ஜகா வாங்கிவிட்டார். அதுமட்டுமின்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, ‘அரசியல் என்பது எவ்வளவு பெரிய ஒன்று. எனது ரசிகர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை’ என்றும் கூறினார்.
ரஜினி இப்படி சொல்லி வருடங்கள் ஓடிவிட்டன. அரசியல் குறித்த கருத்துக்கள் கூறுவதையும் நிறுத்திவிட்டார். அவ்வப்போது சூழ்நிலைகள் காரணமாக அரசியல் மேடை ஏறுகிறார் அவ்வளவுதான். நிலைமை இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, ‘ரஜினி அரசியலுக்கு வர நினைத்தார். ஆனால் அவரை திமுக மிரட்டியது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே நடிக்க சென்றுவிட்டார். மன வலிமை அவருக்கு இல்லை. ஆனால் விஜய்க்கு மன வலிமை அதிகம்’ என கூறினார்.
ஆதவ் அர்ஜுனா அப்படி பேசியதற்கு ரஜினி ரசிகர்கள், அரசியல் தலைகள், திரையுலக பிரபலங்கள் என அத்தனை பேரும் ஒன்றுகூடி கண்டனம் தெரிவித்தார்கள். ரஜினியின் கெத்து ஆதவ் அர்ஜுனாவுக்கு தெரியவில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் உளறுகிறார் என்றும் போட்டு தாக்கினார்கள். ஆனால் ரஜினியோ அமைதியாகவே இருந்தார். சூழல் இப்படி இருக்க இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தனக்கு சப்போர்ட் செய்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு; ‘காலம் பேசாது.. காத்திருந்து பதில் சொல்லும்’ என கூறியிருந்தார்.
அவர், காலம் பேசாது.. காத்திருந்து பதில் சொல்லும் என்று குறிப்பிட்டிருந்தது பேசுபொருளாகியிருக்கிறது. அதாவது அரசியலுக்கு நீங்கள் வர வேண்டும் என ரஜினி ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்தது 30 வருடங்களுக்கு முன்னால். அப்போதிருந்தே அவர், அரசியலுக்கு வருவது கடவுளின் கையில் இருக்கிறது என்பார் அல்லது காலத்தின் கைகளில் இருக்கிறது என்று சொல்வார். இப்போதும் அதையேத்தான் சொல்கிறார். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காலத்தை கை காட்டுவாரோ என்று கிண்டல் செய்து மீம்ஸ்களை பகிர்ந்துவருகிறார்கள். மேலும், முத்து படத்தில் இடம்பெற்றிருக்கும் குலுவாலிலே பாடலில், ‘கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு’ என்ற வரியையும் பகிர்ந்து கலாய்த்துவருகிறார்கள்.
