20க்கும் மேற்பட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டு இப்போது தொகுதி பங்கீட்டில் இழுபறியை சந்தித்து வருகிறது திமுக தலைமை. இதனால் திமுக முகாமில் மாற்றங்கள் நிகழ்வதற்கும் வாய்ப்பிருக்கிறதாம்.

2011க்குப் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து 2021ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது திமுக. அதன் பிறகு தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தது. இந்த வெற்றி இந்த சட்டமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என நம்புகிறது (விரும்புகிறது). அதிமுக என்னும் ஸ்ட்ராங்கான எதிர்க்கட்சியில் ஏற்பட்ட அதிகார போட்டியால் தான் திமுகவிற்கு தொடர் வெற்றிகள் சாத்தியமானது என்ற வாதத்தையும் மறுக்க முடியாது.

ஆனால், இப்போது நிலைமையே வேறு. அதிமுக முகமூடி அணிந்து கொண்டு பாஜக தமிழகத்தில் ஆழமாக வேரூன்ற துடிக்கிறது. அதனால் இந்த தேர்தலில் கொஞ்சம் சறுக்கினாலும் அடி பலமாக இருக்கும். எனவேதான் ஏற்கனவே இருந்த கட்சிகளோடு மேலும் சில கட்சிகளையும் இணைத்துக்கொண்டு 20க்கும் மேற்பட்ட கட்சிகளோடு மெகா கூட்டணியை அமைத்திருக்கிறார் ஸ்டாலின். இது பெரிய கூட்டணி தான். ஆனால் ஸ்ட்ராங்கான கூட்டணியா? என்ற கேள்வியும் நியாயமானது தான். என்னதான் நடக்கிறது கூட்டணியில்? சட்டமன்ற தேர்தல் அட்டவணை அறிவித்தாகி விட்டது. ஆனால், திமுகவில் இன்னும் தொகுதி பங்கீடே நிறைவடையவில்லை.

ஒரு வழியாக காங்கிரஸ் கட்சியை செட்டில் செய்தாகிவிட்டது. ஆனால், திமுக கூட்டணிக்காக களத்தில் இறங்கி வேலை பார்க்கும் காம்ரேட்டுகள் இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை. அதோடு, இப்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனும் முறுக்கிக்கொண்டு நிற்கிறார். இவர் ஒருபடி மேலே போய் தங்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்காவிட்டால் தங்கள் கொள்கையோடு ஒத்த கருத்துடைய வேறு கட்சிகளோடு கூட்டணி வைக்கவும் தயார் என பேட்டியே கொடுத்து விட்டார். என்னதான் நடக்கிறது திமுக கூட்டணியில் Powered By Logo தேமுதிக வரவால் கூட்டணியில் குழப்பமா? தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர திமுக, அதிமுக என இரண்டு தரப்புமே முயற்சிகள் மேற்கொண்டன.

ஆனால், ராஜய்சபா சீட் விவகாரத்தில் அதிமுகவிடம் சேராமல் திமுக பக்கம் கரை ஒதுங்கியது தேமுதிக. அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை. கூட்டணிக்குள் வந்த உடனேயே ஒரு ராஜ்யசபா சீட் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல், 6 முதல் 8 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரேமலதா ஹேப்பிதான். ஆனால் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் ஹேப்பியில்லையே.

அதுதான் இப்போது திமுக தலைமைக்கு பெரிய தலைவலியே. கடந்த முறை தலா 6 தொகுதிகளில் கம்யூனிஸ்ட்டுகள் போட்டியிட்டார்கள். அதனால், இந்த தேர்தலில் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள் கம்யூனிஸ்டுகள். ஆனால், புதிய கட்சிகள் இணைந்துள்ளதை (தேமுதிக, மநீம) காரணம் காட்டி கூடுதல் இடங்கள் வழங்குவதற்கு பதிலாக தொகுதிகளை குறைக்க திட்டமிட்டுள்ளதை கம்யூனிஸ்ட்டுகள் விரும்பவில்லையாம்.

கடந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு கம்யூனிஸ்ட்டுகள் பிரதான காரணமான இருந்தார்கள். அப்படியிருக்க தேமுதிகவோடு கம்பேர் செய்து தங்களுக்கான இடங்களை குறைப்பதை காம்ரேட்டுகள் விரும்பவில்லையாம். வேல்முருகனின் எதிர்பார்ப்பு இதே போல், தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனும் கூடுதல் இடம் கேட்டு அடம்பிடிக்கிறார்.

போன முறை பன்ருட்டி தொகுதியில் வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை 3 முதல் 5 தொகுதிகளை வேல்முருகன் எதிர்பார்க்கிறார். ஆனால் அதற்கு திமுக தலைமை தலையசைத்தாக தெரியவில்லை. அதனால், தாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட்டணியில் இருந்து கழன்று கொள்ளும் மனநிலையில் இருக்கிறார் அவர். இதை மீடியா முன்னிலையிலேயே போட்டு உடைத்தும் விட்டார்.

170 இடங்களில் போட்டியிடும் முடிவில் இருக்கும் திமுகவிற்கு கூட்டணி கட்சிகளின் குடைச்சலால் மனஉளைச்சல் தான் மிச்சமாம். இதை ஸ்டாலின் எப்படி டேக்கில் பண்ண போகிறார் என்பதில் தான் திமுகவின் வெற்றி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *