
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப் போவது யார் என்ற விடைக்கான விடை ஒரு நாள் நாயகரான வாக்காளரின் விரல் நுனியில் காத்திருக்கிறது.
உள்ளே வெளியே ஆட்டத்திற்குப் பின் அமைந்துள்ள கழகக் கூட்டணிகள் ,’ சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்’ என்ற தனிக் காட்டு ராஜா சீமான் .இவர்களோடு கழகங்களுக்கு மாற்று நானே என்று விசில் சப்தத்துடன் களத்தில் குதித்திருக்கும் நடிகர் விஜய் என்ற நான்கு முனைப்போட்டியாக நம் தமிழகம் இந்த முறை தேர்தலைக் காண்கிறது.
சீமானைத் தவிர எந்த கட்சிக்கும் தங்கள் மேல் நம்பிக்கையில்லை என்பதால், ஏட்டிக்குப் போட்டியாக வாய்க்கு வந்த வாக்குறுதிகள் , வாயைப் பிளக்க வைக்கும் இலவசத் திணிப்புகள், கடவுளாலும் கூட நிறைவேற்ற முடியாத த் திட்டங்களை அறிவித்து வாக்காளர்களை மயக்க நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.
‘எந்தக் கட்சி நல்லாட்சி தரும்’ என்ற தேடல் மன நிலையிலிருந்து மாறி, ‘எந்தக் கட்சி எவ்வளவு தரும் ? என்னென்ன தரும் ?’ என்று ஏக்கம் கொள்ளும் பிச்சைக்காரர்கள் நிலைக்கு வாக்களிப்பவர்கள் தள்ளப்பட்டிருப்பது ஜனநாயக அவலம். தேர்தல் முறையின் சீரழிவு.
.
எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் பல குடும்பங்களைச் சீரழித்து , இளைய சமுதாயத்தைக் குடிகாரர்களாக்கி வரும் மதுவை ஒழிப்பதற்கோ அல்லது மதுக்கடைகளை மூடுவதற்கோ உரிய எந்த வித அறிவிப்பும் இல்லை. தொழில்கள் தொடங்கும் திட்டங்கள் இல்லை. தொலைநோக்குப் பார்வையில்லை என்பதால் இந்தத் தேர்தலும் மறுபடியும் ஒரு நாள் கூத்தாகவே மாறியிருக்கிறது.
ஆமாம் ! இப்படித்தான் தேர்தல் .இதில் யார் வந்து ஆகப் போவதென்ன ? என்று வாக்களிக்காமல் இருப்பதும் .. நோட்டோவுக்கும் வாக்களிப்பதும் சரியான தீர்வல்ல.
தெளிவான நீரில் தெரியும் மீன்களைத் தேடிப் பிடிப்பவனை விட, குழம்பியக் குட்டைக்குள் சிறந்த மீனைத் தேடிப் பிடிப்பவன்தான் திறமையுள்ள அறிவாளி.
வாக்களாராகிய நாம் அத்தகையத் திறமையாளராக மாற வேண்டும் .அதற்கு என்ன செய்ய வேண்டும் ?
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் வளர்ச்சி , வேலை வாய்ப்பு , சட்டம் ஒழுங்கு , மக்கள் நலனுக்கான முன்னெடுப்பு இவற்றை சமூகப் பார்வையோடு ஒப்பிட வேண்டும்.
இந்தத் தேர்தல் அறிக்கைகளில் எவையெல்லாம் தொலைநோக்கோடு இருப்பவை .. எவையெல்லாம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடியவை என்பவற்றைத் தேடிப் பார்த்து தெளிவு பெற வேண்டும்.
கட்சி , சின்னம் , தனிநபர் துதிபாடு , சாதி , மதம் , இனம் போன்ற மாயைகளிலிருந்து விலகி நமது தொகுதிக்கு எந்தக் கட்சியினால் என்ன வளர்ச்சி ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்து தற்போது போட்டியிடும் வேட்பாளரின் பின்னணி , அவருடைய செயல்பாடுகள் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
‘என் ஒரு வாக்கால் என்ன பெரிய மாற்றம் வரப்போகிறது?’ என்று வேதாந்தம் பேசுவதும் , பரம்பரை பரம்பரையாக இந்தக் கட்சிக்கு வாக்களித்துப் பழகிவிட்டோம் என்ற பழைய பல்லவியைப் பாடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தேர்தலில் ஆர்வத்தோடு பங்கேற்கும் போது .. படித்த அறிவு ஜீவிகளும். வாக்களிக்க நேரமில்லை .. விருப்பமில்லை என்று போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ளும் நாகரிக சோம்பேறிகளும் , ‘”நாடு சரியில்லை அவர் சரியில்லை சிஸ்டம் சரியில்லை” என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து விளம்பரம் தேடி லைக்ஸ் ஸ்டேட்டஸ் அள்ளும் போலி சீர்திருத்தவாதிகளும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். கடமையைச் செய்யாமல் பலன்களைக் கேட்க உரிமையில்லை என்பதை இவர்கள் உணர வேண்டும்.
‘நம் வாக்குதான் நம் வாழ்க்கை.. நம் இன்றைய முடிவுதான் நாளை நமக்கானத் தொடக்கம்’ என்கிற உரத்த சிந்தனையுடன் உற்சாகமாய் வாக்களிப்போம். விரல் நுனியில் நல் வெளிச்சத்திற்கான விடை தேடுவோம் .
– உதயம் ராம்
