ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு மே 4-ம் தேதி முடிவுகள் வெளியானது. இதில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றிருந்தது. ஆனால், பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதனால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சியின் உதவியை நாடியது தவெக.

இந்த அனைத்து கட்சிகளின் ஆதரவு நேற்று உடன் கிடைக்க, அந்தக் கட்சிகளின் தலைவர்கள் உடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார் தவெக தலைவர் விஜய்.

முதல்வர் ஜோசப் விஜய்
ஆட்சி அமைக்கவும் ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய். ஆளுநரும் விஜய்யின் கோரிக்கையை ஏற்றுகொண்டார்.

இதையடுத்து இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடந்து வருகிறது.

அதில் தவெக விஜய், ‘ஜோசப் விஜய் எனும் நான்’ என்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை தாண்டி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை.

அதுவும் கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் விஜய்.

அதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, “எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. சினிமாவில் வெற்றி கதாநாயகனாக வரவேண்டும் எனவிரும்பிய உதவி இயக்குநரின் மகன் நான்.

பசி, வறுமை என்பது எல்லாம் எனக்குத் தெரியும். நான் மன்னன் பரம்பரையில் இருந்து வந்தவனல்ல. நான் உங்கள், அண்ணன், தம்பி, மகன் போலதான் நான்.

முதல்வர் ஜோசப் விஜய்
அதனால்தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டுவந்திருக்கிறீர்கள். என்னை அன்பாக ஏற்றிருக்கிறீர்கள். இந்த பயணத்தில் எனக்கு இருந்த கஷ்டங்கள், அவமானங்கள் இருந்தாலும் அது உங்களுக்கும் இருந்தது. அதை எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னுடனே இருந்து, சி.ஜோசப் விஜய் எனும் நான் என்பதை உண்மையாக்கியிருக்கிறீர்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “எந்தப் பொய் வாக்குறுதிகளையும் கொடுக்கமாட்டேன். என்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வேன். சாத்தியமில்லாததை இத்தனைக் கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது என்ன வந்தாலும் செய்துமுடிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இன்று தமிழ்நாடு அரசு இருக்கும் நிலையை நாம் கவனிக்க வேண்டும். ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன்வாங்கி வைத்திருக்கிறார்கள். கஜானாவை துடைத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த அரசு நம் கைகளுக்கு வந்திருக்கிறது. எது எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என விரும்புகிறேன். அப்போதுதான் வெளிப்படைத் தன்மையுடன் அரசு இருக்கும்.

எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும். நான் சொன்னதை எல்லாம் படிப்படியாக நிறைவேற்ற முயற்சி செய்வேன். இது உங்கள் ஆட்சி. பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் கலாச்சாரம் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துவேன், கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர் என அடிப்படை விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவேன்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *