
கோவை அதிமுகவின் கோட்டை.. திமுக ஆட்சியில் இருந்தாலும் கோவையில் ஆட்சி செய்தது அதிமுக தான். இந்த தேர்தலிலும் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்” என கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற என்.டி.ஏ கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
கோவையில் இன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. எதிர்வரும் தேர்தல் ஒரு குடும்பத்திற்கும், தமிழ்நாட்டிற்குமான தேர்தல். தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நடக்கும் தேர்தல். குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டும் தேர்தல். மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவோம்.
தீய சக்தி திமுக வேரோடு அழிக்கப்பட்ட வேண்டும் என அதிமுக தோற்றுவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசின் உதவியால் கொண்டு வந்தோம். அதனால் அதிமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெற்றது. என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது.
இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் பிரதமர் மோடி. இந்தியாவை நிறைய பிரதமர்கள் ஆட்சி செய்தார்கள். ஆனால் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு நாட்டிற்கு மிகப் பெரிய பெருமை கிடைக்கப் பெறச் செய்திருக்கிறார். பிரதமர் மோடி இரவு பகல் பாராமல் நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்கிறார். கோவை மாவட்டம் அதிமுக கோட்டை. 2021 தேர்தலில் கோவை மாவட்டத்தின் 10 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஒரு இடம் கூட திமுக வெற்றி பெறவில்லை. திமுக ஆட்சியில் இருந்திருக்கலாம். ஆனால் கோவையில் ஆட்சி செய்தது அதிமுக கூட்டணி. 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.” எனப் பேசியுள்ளார்.
