சீமான் கட்சி துவங்கியதில் இருந்தே தனித்து தான் போட்டியிடுகின்றார். எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து 234 தொகுதியிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றனர். மேலும் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம். அதற்கு பதிலாக வாய்ப்பு கொடுத்தால் நல்லாட்சியை கொடுப்போம் என தொடர்ந்து கூறி வருகின்றார் சீமான். வழக்கம் போல இம்முறையும் சீமான் தனித்தே தான் தேர்தலில் சந்திக்கின்றார்.

இம்முறை சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகின்றார். மேலும் தனது வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் பரப்புரை செய்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் செங்கல்பட்டில் பரப்புரை செய்தார் சீமான். அந்த பரப்புரையில் ,நான் ஏன் கூட்டணி வைப்பதில்லை என்பது குறித்து பேசியுள்ளார். மேலும் திமுக அரசையும் கடுமையாக பேசி விமர்சனம் செய்துள்ளார் சீமான்.

அவர் பேசியது, நல்லாட்சி கொடுத்தால் விளம்பரம் செய்ய தேவையில்லை. திமுகவினர் தான் ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும் என கூறி வருகின்றனர். மக்கள் யாருமே சொல்லவில்லை.கோடிக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்து ஸ்டாலின்ஆட்சி தொடரட்டும் என சொல்ல வைக்கின்றனர். ஆனால் நல்லாட்சி கொடுத்திருந்தால் மக்களே இதை சொல்லியிருப்பார்கள். தங்களின் மனதில் இருந்து ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும் என சொல்லியிருப்பார்கள்.

ஆனால் அப்படி சொல்லவில்லை. அந்தளவிற்கு ஆட்சி சரியில்லாமல் இருந்தது. பதிலுக்கு அவர்களே ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும் என கூறிக்கொண்டு வருகின்றனர். இதற்கு பெயர் தான் செய்தி அரசியல் ,விளம்பர அரசியல். சேவை அரசியலும் செயல் அரசியலும் இருந்திருந்தால் விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு நல்லாட்சியை கொடுத்திருந்தால் கூட்டணி தேவையில்லை, வாக்கிற்கு பணம் கொடுக்க தேவையில்லை.

எட்டாயிரம் டோக்கன் தேவையில்லை, இலவச அறிவிப்பு தேவையில்லை. எங்களுக்கு இதுவரை எந்த பதவியும் கிடைக்கவில்லை. ஆனாலும் ஏன் தெரியுமா தனித்தே போட்டியிடுகின்றோம் ? எங்களிடம் உண்மை இருக்கின்றது. தீய சக்திகளிடம் இருக்கும் விஷயங்கள் நம்மிடம் பரவி விட கூடாது என்பதற்காக தான் தனித்து நிற்கின்றோம். மேலும் அவர் பேசுகையில், நாம் தமிழர் கட்சிக்கு 8 .5 % வாக்கு வங்கி இருக்கின்றது. ஆனால் 0 .5 % வாக்குகளை வைத்திருக்கும் கட்சிகளிடையே பேரம் பேசுகின்றார்கள், பத்து தொகுதி, பல கோடி என அவர்களிடமே பேரம் பேசுகின்றார்கள் என்றால் எங்களிடம் பேசாமலா இருந்திருப்பார்கள் ? அப்படி இருந்தும் ஏன் நாம் தனித்தே போட்டியிடுகின்றோம்.

பதவியா ? மக்களா ? பணமா ? இனமா ? என்றால் மக்களும் இனமும் தான் எங்களுக்கு முக்கியம். அதனால் தான் தனித்து நிற்கின்றோம். அதைப்போல திமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத்திற்கு போனவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் ? எதாவது எதிர்ப்பு போராட்டத்தை அவர்கள் செய்தார்களா ? எதுவுமே இல்லை, பதவிக்காக சரணடைந்துவிடுவார்கள். இதற்காகவா கட்சி ஆரம்பித்தோம், இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும் என சீமான்பேசியிருக்கிறார்.

இந்நிலையில் சீமான் தொடர்ந்து தனித்து நிற்பதால் தான் அவரால் நினைத்தவாறு வெற்றிபெறவில்லை. இதுவே கூட்டணி வைத்திருந்தால் இந்நேரம் சீமானின் கட்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும் என பலர் சொல்கின்றனர். ஆனால் சீமான் தான் ஏன் தொடர்ந்து தனித்து போட்டியிடுகின்றேன் என்பதை அழுத்தமாக கூறி வருகின்றார்.

மேலும் தன்னிடமும் பேரம் பேசியிருக்கிறார்கள், இருந்தும் மக்களுக்காக தனித்து போட்டியிடுகின்றேன் கூறியுள்ளார் சீமான். அதோடு திமுக கட்சியையும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பவர்களை கடுமையாக சாடியிருக்கின்றார். பதவிக்காகவும் பணத்திற்காகவும் கூட்டணி வைத்தால் பிறகு கட்சி துவங்கியதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என சீமான் சொல்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *