
டெல்டா என்றாலே சசிகலா பேக்டர் தான் அரசியலை உற்றுநோக்கும் பலருக்கும் நினைவிற்கு வரும். ஏனெனில் இவரது குடும்பம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தது. முக்குலத்தோர், முத்தரையர், தலித்கள், சிறுபான்மையினர் வாக்குகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 1952 முதல் தேர்தலை சந்தித்து வரும் இந்த தொகுதியில் அதிகபட்சமாக சிபிஐ 6 முறையும், திமுக 5 முறையும் வென்றுள்ளது. கடைசியாக நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் டி.ஆர்.பி.ராஜா வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். அதிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறை அமைச்சர் பதவி கிடைத்தது.
2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு செல்வதாக முன்வைத்து நடந்த காரசாரமான பேச்சின் போது, டி.ஆர்.பி.ராஜாவை பார்த்து “My Dear Young Man” என்று ஜெயலலிதா பேசியது பெரிதும் பேசுபொருளாக மாறியது. இவர் 4வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அமமுக எஸ்.காமராஜ், தவெக ராஜராஜன், நாம் தமிழர் கட்சி பாரதிசெல்வன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக உள்ளூரில் செல்வாக்கு பெற்ற சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராசுபிள்ளை களம் காண்கிறார். எனவே மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.
கடந்த தேர்தலில் டி.ஆர்.பி.ராஜா 87,172 வாக்குகளை பெற்றார். அதேசமயம் அதிமுக 49,779 வாக்குகளும், அமமுக 40,481 வாக்குகளும் பெற்றன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தியால் டிடிவி தினகரனின் அமமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தன. இம்முறை அதிமுக, அமமுக கூட்டணி அமைத்திருப்பதால் திமுகவிற்கு டஃப் கொடுக்கும் என்கின்றனர். குறிப்பாக கடந்த முறை அமமுக சார்பில் போட்டியிட்ட அதே காமராஜ் தான் மீண்டும் போட்டியிடுகிறார். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சசிகலா தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த முறை அமமுகவிற்கு கிடைத்த வாக்குகள் இம்முறை சசிகலா கட்சிக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு தேர்தல் அலுவலகம் திறந்து, வீடு வீடாக விளம்பரம் செய்வது என தீயாய் வேலை செய்து வருகின்றனர்.
இதுதவிர நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள், புதிதாக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கான வாக்குகள் போன்றவற்றால் போட்டி கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் திமுக அரசின் ஏராளமான நலத்திட்டங்களால் அமைச்சர் டி.ஆர்.ராஜா மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். கூட்டணி பலமும், டி.ஆர்.பி.ராஜாவின் தனிப்பட்ட செல்வாக்கும், தொகுதியில் நிலவும் நற்பெயரும் சேர்ந்து தவெகவிற்கு விழும் இளைஞர்களின் வாக்குகளை பெருமளவு தடுக்கும் என்று திமுகவினர் கூறுகின்றனர். அதேசமயம் சசிகலாவின் சொந்த மண் என்பதால் அவருக்கான செல்வாக்கு மற்றும் அனுதாப அலைக்கு கிடைக்கும் வாக்குகளால் நெருக்கடி ஏற்படலாம்.
