ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பணம் சார்ந்த நிறைய விதிமுறைகளில் மாற்றம் வந்துள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று ஏடிஎம் பரிவர்த்தனை விதிமுறை. யூபிஐ செயலிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் ஏடிஎம் பணம் எடுக்கும் சேவைகளும் இனி இலவசப் பரிவர்த்தனை வரம்பில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது. முன்பு, இந்தப் பரிவர்த்தனைகள் தனித்தனியாகக் கணக்கிடப்பட்டன. ஆனால் இப்போது யூபிஐ மற்றும் வழக்கமான டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பது ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்படும்.

5 இலவச பரிவர்த்தனைகள்

நிர்ணயிக்கப்பட்ட வரம்பு எட்டப்பட்ட பிறகு, ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் 23 ரூபாயும் வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். பொதுவாக, உங்கள் வங்கியின் ஏடிஎம்களில் ஐந்து இலவச நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளை உங்களால் செய்ய முடியும். மற்ற வங்கி ஏடிஎம்கள் பெருநகரங்களில் மூன்று இலவசப் பரிவர்த்தனைகளையும், பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளையும் வழங்குகின்றன. இப்போது, யூபிஐ பரிவர்த்தனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது நம்முடைய வரம்பை விரைவாகத் தீர்த்துவிடும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி பல டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுக்கும் வரம்பைக் குறைத்துள்ளது. முன்பு, RuPay, Visa மற்றும் Mastercard ஆகிய கார்டுகளில் ரூ. 100,000 வரை பணம் எடுக்க முடிந்தது. ஆனால் இப்போது இந்த வரம்பு 50,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிரீமியம் கார்டுகளுக்கான வரம்பும் 1,50,000 ரூபாயில் இருந்து ரூ. 75,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி

HDFC வங்கி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் ஒரு தெளிவான விதிமுறை மாற்றத்தை அறிவித்துள்ளது. யூபிஐ செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து எடுக்கப்படும் பணம், இனி மாதத்திற்கான 5 இலவசப் பரிவர்த்தனைகள் என்ற வரம்பில் கணக்கிடப்படும். இந்த வரம்பு மீறப்பட்டவுடன் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

பந்தன் வங்கி

பந்தன் வங்கியும் தனது விதிமுறைகளைப் புதுப்பித்துள்ளது. அதன் சொந்த ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் ஐந்து இலவச நிதிப் பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும். அதே சமயம் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு வரம்பு இல்லை. மற்ற வங்கி ஏடிஎம்களில் பெருநகரப் பகுதிகளில் மூன்று இலவசப் பரிவர்த்தனைகளும், பெருநகரம் அல்லாத பகுதிகளில் ஐந்து இலவசப் பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படும். இதில் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் இரண்டும் அடங்கும்.

கட்டணத்தைத் தவிர்ப்பதற்கான வழி

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்களிடம் பிடிக்கப்படும் 23 ரூபாய் கட்டணத்தைத் தவிர்ப்பதற்கான முதல் வழி சரியான திட்டமிடுதல் ஆகும். சிறிய தொகைகளைத் திரும்பத் திரும்ப எடுப்பதற்குப் பதிலாக, உங்களுக்குத் தேவையான முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுப்பதன் மூலம் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைந்தபட்சமாக வைத்திருக்கலாம்.

இரண்டாவது வழி என்னவென்றால், உங்கள் வங்கியின் ஏடிஎம்களில் மட்டும் முடிந்த வரையில் பணம் எடுக்க வேண்டும். ஏனெனில் அங்கு இலவச வரம்பு அதிகமாக இருக்கும். அதேபோல, நீங்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அதிகம் மேற்கொள்ளலாம். சிறிய செலவுகளுக்கு யூபிஐ அல்லது செயலிகளைப் பயன்படுத்தலாம். பேலன்ஸ் சரிபார்ப்பு அல்லது மினி ஸ்டேட்மெனண்ட பார்க்க ஏடிஎம்களைப் பயன்படுத்தாமல், மொபைல் பேங்கிங் செயலிகளைப் பயன்படுத்தலாம். உங்கள் மாதாந்திரப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் கண்காணிப்பதன் மூலம் கூடுதல் கட்டணங்களை நீங்கள் தவிர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *