
னது கணவர் ஆம்ஸ்ட்ராங் இறந்தவுடன் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கிய அவரது மனைவி பொற்கொடி தற்போது அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், அவருக்கு இயக்குனரும் நீலம் நீலம் பண்பாட்டு மைய நிறுவனருமான பா.ரஞ்சித் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவரது மனைவியாக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது இந்த கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இரட்டை இலை சின்னத்தில் திரு.வி.க. (தனி) நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
தனது கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதால் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். திரு.வி.க.நகர் தொகுதியில் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. இந்த தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்று பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கூறியுள்ளார். இதனிடையே இவருக்கு இயக்குனரும் நீலம் நீலம் பண்பாட்டு மைய நிறுவனருமான பா.ரஞ்சித் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்.
கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெய்பீம் என்று பதிவிட்டுள்ளார்.
